கோவை திருநங்கை கொலையில் திடீர் திருப்பம்… சென்னை ஐடி ஊழியர் கைது.. ஆள்மாற்றி கொலை செய்தது அம்பலம்…!!

Author: Babu Lakshmanan
3 February 2024, 4:20 pm
Quick Share

கோவையில் திருநங்கை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சென்னையைச் சேர்ந்த ஐடி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை வடவள்ளியில் இருந்து மருதமலை ரோடு செல்லும் பகுதியிலே இந்திரா நகர் உள்ளது. இங்கு வசிக்கும் திருநங்கை மாசி எனும் மாசிலாமணி. மாசி என்கிற திருநங்கை, அவரின் ஆண் நண்பர் மணியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், குன்னூரை சேர்ந்த மென்பொறியாளர் திருநங்கை தனலட்சுமி (வயது 39) என்பவருக்கு மாசியுடன் பழக்கம் ஏற்பட்டது.

தனலட்சுமி ஒரு மென்பொருள் நிறுவனத்தில் சீனியர் அனாலிஸ்டாக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. மாசியுடன் தனலட்சுமிக்கு நட்பு ஏற்பட்டு, கடந்த சில வாரங்களாக மாசியுடன் ஒரே வீட்டில் தனலட்சுமியும் வசித்து வந்து உள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஜன., 29ம் தேதி இரவு மர்ம நபர்கள் தனலட்சுமியை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதனால் சம்பவ இடத்திலேயே தனலட்சுமி ரத்த வெள்ளத்தில் மிதந்தவாறே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த கோவை மாநகர தெற்கு துணை ஆணையாளர் சரவணகுமார், உதவி ஆணையர் ரவிகுமார் மற்றும் வடவள்ளி காவல் துறையினர் இந்திராநகர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அங்கு கொலை செய்யப்பட்டு கிடந்த தனலட்சுமியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் நடமாடுவது தெரிய வந்தது.

அந்த நபர் குறித்து விசாரணை செய்ததில், தனலட்சுமியை கொலை செய்தது சென்னை புழுதிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் கந்தசாமி என்பவர் என்று தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, தனிப்படை அமைத்து தேடி வந்த போலீசார், மதுரையில் வைத்து தினேஷை கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனர்.

அவரிடம் விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் வெளியாகியது. மருதமலை கோவிலுக்கு அடிக்கடி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அந்த வகையில், கடந்த விநாயகர் சதுர்த்தியன்று மருதமலை கோவிலுக்கு வந்த போது, அடிவாரப் பேருந்து நிறுத்தித்தில் நின்றுள்ளார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் தினேஷை தாக்கிவிட்டு, அவரிடம் இருந்த பணத்தை பறித்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தால் கோபமடைந்த தினேஷ் கந்தசாமி, கடந்த அக்டோபர் மாதம் மீண்டும் மருதமலை கோவிலுக்கு வந்த போது, தன்னை அடித்து பணத்தை பறித்து கொண்டு சென்றவர்கள் இருக்கிறார்களா..? என்று அங்கு தேடியுள்ளார். அப்போது, வடவள்ளியில் வசித்து வந்த திருநங்கை மாசிலாமணி மற்றும் அவரது நண்பர் மணி அங்கு இருந்துள்ளனர். அவர்களிடம் இது தொடர்பாக விசாரிக்கையில், இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நடந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தினேஷின் பெற்றோரை திருநங்கை மாசிலாமணி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த தினேஷ் அங்கிருந்து பெற்றோருடன் திரும்பிச் சென்றுள்ளார். இதையடுத்து, தனது பெற்றோரை தாக்கிய திருநங்கை மாசிலாமணியை கொலை செய்ய திட்டமிட்டு, சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்துள்ளார். மாசிலாமணியின் வீட்டுக்கு சென்ற போது, அங்கு தூங்கிக் கொண்டிருந்த தனலட்சுமியை, மாசிலாமணி என்று எண்ணி கத்தியால் குத்தி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

கைது செய்யப்பட்ட பிறகே மாசிலாமணிக்கு பதிலாக தனலட்சுமியை கொலை செய்த தகவல் தினேஷ் கந்தசாமிக்கு தெரிய வந்தது. இந்த சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 327

0

0