கோவையின் முதல் மாலுக்கு வந்த சோதனை.. கடைகளுக்கு சீல் வைக்க முடிவு? மாநகராட்சி அதிரடி நடவடிக்கை!!!

Author: Udayachandran RadhaKrishnan
21 February 2023, 9:21 pm
Seal 1 - Updatenews360
Quick Share

கோவை மாநகரத்தில் ஏராளமான மால்கள் (வணிக வளாகங்கள்) தற்போது உள்ளன. ஆனால் முதன்முறையாக 1990களில் வந்தது தான் சேரன் டவர்ஸ். இங்கு 88 கடைகள் உள்ளது.

இந்த வணிக வளாகம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கேசி பழனிசாமிக்கு சொந்தமானது. இடைப்பட்ட காலத்தில் சில கடைகளை விற்பனை செய்த நிலையில், கடந்த வாரம் அவருக்கு சொந்த மான கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்திருந்தனர்.

இந்த நிலையில் கோவை மாநகராட்சிக்கு நீண்ட காலங்களாக வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ள கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்திருந்தார்.

மேலும் வரி செலுத்துவதற்க்காக சிறப்பு முகாம்களும் மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டன. அந்த முகாம்களை பயன்படுத்தி கொண்டு மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனடியாக செலுத்த வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் வரி செலுத்தாத கடைகள், வணிக வளாகங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை அரசு கலைக்கல்லூரி அருகில் உள்ள சேரன் டவர் வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் 88 கடைகள் மாநகராட்சிக்கு வரி செலுத்தாமல் 98 லட்சம் ரூபாய் வரி நிலுவை வைத்திருந்ததால் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உத்தரவின் பேரில் மத்திய மண்டல உதவி ஆணையாளர் மகேஷ்கனகராஜ் தலைமையில் 10க்கும் மேற்பட்ட மாநகராட்சி அலுவலர்கள் அக்கடைகளுக்கு சீல் வைத்தனர்.

இன்று 18 கடைகளுக்கு சீல் வைக்க சென்ற நிலையில் அதில் 3 கடைகள் கடைசி நேரத்தில் வரி செலுத்தியதால் 15 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மீதமுள்ள கடைகளுக்கு நாளை சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படிப்படியாக வரி செலுத்தாத அனைத்து கடைகளுக்கும் சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைக்கச் சென்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Views: - 398

0

0