விவசாயிகள் மீது கடும் கோபத்தில் ஆட்சியர் : விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் இருந்து வெளியேறியதால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
28 May 2022, 2:49 pm
Tirupur Collector Angry - Updatenews360
Quick Share

திருப்பூர் : விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் இருந்த கோபமாக வெளியேறிய மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து விவசாயிகளிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதம்தோறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம் . இம்மாதம் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் உள்ள கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்த பணிகள் நடைபெற்று வந்தன .

இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் வருகை தந்திருந்தனர் . இந்நிலையில் கடந்த மாதங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வந்த நிலையில் தற்போது தரைதளத்திற்கு மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , விவசாயிகள் அளிக்கும் மனுக்களுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டி விவசாயிகள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் .

இந்நிலையில் விவசாய குறைதீர் கூட்டத்துக்கு வந்த மாவட்ட ஆட்சியர் வினீத் விவசாயிகளை நாற்காலியில் அமருமாறும் இடப்பற்றாக்குறை காரணமாக மேலும் கூடுதல் இருக்கைகள் கூட்ட அரங்கிற்கு வெளியில் ஏற்பாடு செய்து தரப்படும் என உறுதியளித்தார் .

அதனை ஏற்றுக்கொள்ளாத விவசாயிகள் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் திடீரென கோபமடைந்த மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இருக்கையிலிருந்து எழுந்து மாவட்ட ஆட்சியர் வினீத் அதிகாரிகளையும் எழுந்து போக கூறி கோபமாக கூட்ட அரங்கை விட்டு வெளியேறினார்.

இதனையடுத்து விவசாயிகள் தொடர்ந்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் விணீத் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து விவசாயிகளிடம் மனுக்களை பெற துவங்கினார்.

ஒரு பிரிவு விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் மற்றொரு பிரிவு விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் மனுக்களை அளித்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 923

0

0