சப்பாத்தி தான் போடுவீங்களா..? மேடையில் கேள்வி கேட்ட காங்., எம்பி கார்த்தி சிதம்பரம் ; முற்றுகையிட்டு பாஜகவினர் வாக்குவாதம்..!!

Author: Babu Lakshmanan
26 February 2024, 7:31 pm
Quick Share

அம்ரித் பாரத் ரயில் நிலைய விரிவாக்க திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற கார்த்திக் சிதம்பரத்திற்கும், பாஜகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் சலசலப்பு நிலவியது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ரயில்வே நிலையத்தை பாரத பிரதமரின் அம்ரித் பாரத் ரயில் நிலைய விரிவாக்க திட்டத்தின் கீழ் ,புதிய வசதிகள் கொண்ட ரயில் நிலையமாக மாற்றும் பணி நடைபெற்று வந்தது. சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குளிர்சாதன பயணிகள் ஓய்வு அறை, மேம்பால நடைபாதை, மின் தூக்கிகள்,பயணிகள் இருக்கை, நவீன கேமராக்கள், பயணிகள் அறிவிப்பு பாதாதை போன்றவை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வசதிகள் கொண்ட ரயில்நிலைய திறப்பு விழா இன்று காரைக்குடியில் நடைபெற்றது. பாரதப் பிரதமர் மோடி காணொளி காட்சியின் வாயிலாக இந்த புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், பங்கேற்க வந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், “காரைக்குடியை திருச்சி மண்டலத்திற்கு மாற்ற பலமுறை கோரிக்கை வைத்தும் செய்யவில்லை, தமிழ்நாட்டில் ரயிலில் ஏறினாலும் சாப்பிட சப்பாத்தி தான் கொடுக்கிறார்கள், நம்ம ஊர் சாப்பாட்டை தருவதில்லை. கேட்டால் மத்திய அரசின் கேண்டீனில் இருந்து வருகிறது என்கிறார்கள்,” எனக் கூறினார்.

இந்தப் பேச்சால் கார்த்தி சிதம்பரத்திற்கும், பாஜக மாவட்டத் தலைவர் மேப்பல் சக்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கார்த்திக் சிதம்பரம் மேடையில் ஏறி பேசும் போது, அரசியல் பேசக்கூடாது என பாஜகவினர் தடுத்ததால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் மாறி,மாறி காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக பாதுகாப்பிற்கு நின்ற காவல்துறையினர் இரண்டு தரப்பினரையும் சமாதானம் செய்து, மேலும் பிரச்சினை ஏற்படாமல் தடுத்து அனுப்பி வைத்தனர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Views: - 135

0

0