ஊரடங்கை மீறி ஊர்சுற்றிய மக்கள்: 75 பேருக்கு கொரோனா பரிசோதனை….நெல்லை போலீசார் நடவடிக்கை!!
Author: Rajesh23 ஜனவரி 2022, 3:44 மணி
நெல்லை: நெல்லையில் ஊரடங்கு விதிமுறை மீறிய 75 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா பரவலின் வேகத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
பால், பத்திரிகை, மருத்துவம், பெட்ரோல் பங்குகள் போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்களில் பார்சல் சேவை மட்டும் அனுமதி, குறைந்த எண்ணிக்கையில் மின்சார ரயில்கள் மட்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகளை கண்காணிக்கும் பணியில் தமிழகம் முழுவதும் 60 ஆயிரம் போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்திலும் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் திசையன்விளை-நவ்வலடி, நாங்குநேரி – உவரி புறவழிச்சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்த புறவழிச்சாலை வழியாக தடையை மீறி வாகனங்களில் சென்றவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வழிமறித்து கட்டாய கொரோனா பரிசோதனை செய்ய வைத்தனர்.
மேலும், நவ்வலடி பகுதியில் ஞாயிறு ஊரடங்கு தடையை மீறி வெளியே சுற்றிய 75 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டதை தொடர்ந்து போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். இதனால், வெளியே சுற்றித்திரிந்த மக்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
0
0