மேலும் ஒரு கிராம நிர்வாக அலுவலரை கொல்ல முயற்சி.. கனிமவள கொள்ளை கும்பல் அட்டூழியம் ; தமிழகத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி

Author: Babu Lakshmanan
4 May 2023, 4:57 pm
Quick Share

தர்மபுரி மாவட்டத்திலும் கனிம வள கொள்ளையை தடுக்க முயற்சித்த கிராம நிர்வாக அதிகாரியை நள்ளிரவில் கொல்ல முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள எட்டிப்பட்டி அழகிரி நகர் கிராமத்தை சேர்ந்தவர் கிராம நிர்வாக அலுவலர் இளங்கோ. இவர் நேற்று முன்தினம் இரவு மெனசி பகுதியில் கனிம வள கொள்ளை நடப்பதாக வந்த ரகசிய தகவல் கிடைத்ததும், மழையையும் பொருட்படுத்தாமல் தனது இரு சக்கர வாகனத்தில் கனிம வளங்கள் கொள்ளை அடிப்பதாக கூறப்படும் பகுதிக்கு, கனிவள கொள்ளை கும்பலை கையும் களவுமாக பிடிப்பதற்காக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.

அப்போது, குண்டலமடுவு காளியம்மன் கோவில் அருகில் உளி கற்களை ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று அதிவேகமாக சென்றுள்ளது. அவற்றை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க கிராம நிர்வாக அலுவலர் முயற்சித்த போது, அந்த டிராக்டர் நிற்காமல் இவர் மீது ஏற்றிக் கொள்ளும் வகையில் வேகமாகச் சென்றுள்ளது. அதிர்ச்சியடைந்த இவர் அதிர்ஷ்டவசமாக வாகனத்தில் சிக்காமல் தப்பித்ததாகக் கூறப்படுக்றது.

இதனால் பெரும் அதிர்ச்சியும், பயமும் கொண்ட கிராம நிர்வாக அலுவலர் இளங்கோ, வாகனம் யாருடையது என்பது குறித்து ஆய்வு செய்ததில் மெணசி பகுதியை சார்ந்த ராகவன் என்று தெரியவந்துள்ளது. இந்த நபர் சொந்தமாக ஜேசிபி இயந்திரம் கொண்டு கனிம வளங்களை திருடி தனது டிராக்டர் மூலமாக விற்பனை செய்து வந்ததும் கிராம நிர்வாக அதிகாரியின் கவனத்திற்கு வந்துள்ளது.

இந்த கும்பலுக்கு மெனசி ஊராட்சி மன்ற தலைவர் அன்பரசு, பூதநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் அருணாச்சலம், துணைத் தலைவர் பெருமாள் ஆகியோர் உதவியாக இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த கும்பலிடம் இருந்து தற்போது கிராம நிர்வாக அலுவலருக்கு மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது இந்த பகுதியில் நேர்மையாக பணியாற்றி வருவதாகவும், தான் பட்டியல் இனத்தை சார்ந்தவர் என்பதால் தனக்கு இந்த கும்பல் பெரும் அச்சுறுத்தலை கொடுத்து வருவதாகவும், இடையூறாக இருந்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி வருவதாக தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியருக்கு புகார் தெரிவித்துள்ளதாகவும், காவல் துறையில் உரிய ஆவணங்களுடன் புகார் மனு அளித்ததாக தெரிவித்தார்.

Views: - 338

0

0