பெண்களின் ஓட்டுக்கு வேட்டு வைத்த திண்டுக்கல் லியோனி: கடும் அதிர்ச்சியில் உறைந்த ஸ்டாலின்

Author: Udhayakumar Raman
25 March 2021, 9:33 pm
Quick Share

ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் தமிழக சட்டப்பேரவைத்தேர்தலில் திமுக மிக மோசமான தோல்வியை தழுவ நேர்ந்தால் அதற்கு முக்கிய காரணம் பெண்கள் மீது அண்மைக்காலமாக திமுக தொடுத்து வரும் தாக்குதலா? அல்லது ஸ்டாலின் மீது மக்கள் நம்பிக்கை வைக்காததா? என்று ஒரு பெரிய பட்டிமன்றமே நடத்தலாம். இதில் முதல் கேள்வியை எடுத்துக் கொண்டால் அதுபற்றி விவாதிப்பதற்கு ஏராளமான விஷயங்கள் உண்டு. பொதுவாக திமுகவில் நான்காம் கட்ட மேடைப் பேச்சாளர்கள்தான், அதிமுகவை தாக்குவதாக நினைத்து பெண்களை நிறையவே கேலி பேசுவார்கள்.

இவையெல்லாம் ஊடகங்களில் அவ்வளவாக பிரதிபலிக்காது. அல்லது வெளியேவும் வராது. ஆனால் இது, சமூக ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தும் காலம். யார் எங்கு எது பேசினாலும், அடுத்த அரை மணிநேரத்தில் தகுந்த வீடியோ ஆதாரங்களுடன் உலகின் மூலை முடுக்கெல்லாம் அது போய் சேர்ந்து பரபரப்பை ஏற்படுத்திவிடும். பெண்களை அவதூறு பேச்சு மூலம் திமுக தாக்குவது இன்று நேற்றல்ல, கருணாநிதி காலத்திலிருந்தே உள்ள ஒன்று என கூறப்படுவது உண்டு. மறைந்த பிரதமர் இந்திரா காந்தி 1977-ல் மதுரை வந்தபொது கருணாநிதி மிக மோசமான வார்த்தைகளால் தாக்கிப் பேசியதாகவும் சொல்வார்கள்.

Dmk Case - Updatenews360

அப்போது அவருக்கு பலத்த எதிர்ப்பும் கிளம்பியது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது தென்சென்னை திமுக வேட்பாளர், தமிழச்சி தங்கபாண்டியனுக்காக பிரச்சாரம் செய்த உதயநிதி, அவரை அழகான பெண் வேட்பாளர் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கிண்டல் செய்வதாக நினைத்து, சசிகலாவையும் வம்புக்கு இழுத்தார், உதயநிதி. இதற்கு மகளிர் அமைப்புகள் கடும் கண்டனமும் தெரிவித்தன. போலீசிலும் புகார் கொடுக்கப்பட்டது.

Srirangam Sasikala - Updatenews360

ஆனால் தான் பேசியது, தவறு என்பதை உதயநிதி கடைசிவரை உணர்ந்ததாகவே தெரியவில்லை. இதுபோல பேசுவது, யாராலும் கூர்ந்து கவனிக்கப் படுவதில்லை என்று நினைத்தால் அது மிகப்பெரிய தவறு. அதுவும் இதை பெண்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள் என்று கருதினால் அதைவிடத் தவறு. திமுக ஆட்சிக்கு வந்து விடும் அதனால் யாரும் நம்மை கேள்வி கேட்க மாட்டார்கள் அல்லது அதை எளிதில் மறந்து விடுவார்கள் என்ற அசட்டு தைரியத்தில் உதயநிதி இப்படி பேசி இருக்கவும் வாய்ப்பு உள்ளது. ஆனாலும் இது பெண்களிடையே நிச்சயம் வெளிப்படுத்த முடியாத கோபக் கனலை, மனதில் ஏற்படுத்தியிருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

udhayanidhi -- sasikala - updatenews360

இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் கோவை மாவட்டத்தில் நடத்திய மக்கள் கிராம சபை கூட்டத்தில் ஒரு பெண் எழுந்து அவரிடம் கிடுக்குப்பிடி கேள்வி ஒன்றைக் கேட்டார். அதனால் கோபமடைந்த ஸ்டாலின் அந்தப் பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்த கூறியபோது அந்தப் பெண்ணை சிலர் மானபங்கப்படுத்தி தாக்குதலும் நடத்தினர். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வைரலாக பரவியது. இதை ஸ்டாலின் கண்டிக்கவே இல்லை. அந்தப் பெண் எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் கூட அவர் மீது தாக்குதல் நடத்தியதை ஏற்க முடியாது என்று ஸ்டாலின் கூறியிருக்க வேண்டும்.

ஆனால் அவர் அப்படி எதுவும் சொல்லவில்லை.இன்னொரு கிராமசபை கூட்டத்தில், பெண்கள் கூடி இருந்த பகுதிக்கு மிக அருகில் சென்று, “இந்த இடத்தை விட்டு நகர எனக்கு மனமே இல்லை. உங்களை நாளெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது” என்று மகிழ்ச்சி பொங்க கூறினார். அவர் எதற்காக அப்படி சொன்னார் என்பது இதுவரை யாருக்கும் புரியாத ஒன்று. ஆனால் பெண்கள் மனதில் ஸ்டாலின் இப்படி சொன்னது நிச்சயம் ஒரு எதிர்மறை விளைவைத்தான் ஏற்படுத்தியிருக்கும்.

இதற்கிடையே கடந்த அக்டோபர் மாதம், திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இந்துப் பெண்கள் எல்லோருமே விலைமாதர்கள் என்று மனுஸ்மிருதியில் கூறியிருப்பதாக ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்கவே இல்லை. மாறாக திருமாவளவன் சொன்னது சரிதான் என்று பரிந்து பேசினார். இதுவும் பெண்கள் மனதில் ஒரு ஆறாத வடுவாக பதிந்திருக்கும் என்பது நிச்சயம். மிக அண்மையில் கோவை நகரில் திமுகவிற்காக தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி பேசுகையில்,

“சீமைப் பசுவின் பாலை குடித்து குடித்து இன்றைய பெண்களின் இடுப்பு பேரல் போல் ஆகிவிட்டது. அவர்களின் இடுப்பில் குழந்தைகள் உட்கார்ந்தால் வழுக்கிக் கொண்டு கீழேதான் போகின்றன” என்று பட்டிமன்றத்தில் எப்போதும் பேசுவதுபோல் பெண்களை நக்கலடித்தார்.இடுப்பு என்கிறபோது, இன்னொரு சம்பவமும் அனைவரது நினைவிற்கும் வரலாம். 3 வருடங்களுக்கு முன்பு கரூர் மாவட்ட திமுக மகளிரணி நிர்வாகி ஒருவர் காவிரி பிரச்சனை தொடர்பான போராட்டத்தில் கலந்துகொண்டபோது அவருடைய இடுப்பை திமுக இளைஞர் அணி நிர்வாகி ஒருவர் வேண்டுமென்றே பலமாக கிள்ளி இருக்கிறார்.

ஆவேசமடைந்த அந்தப் பெண் சம்பந்தப்பட்ட இளைஞரின் பெயரை குறிப்பிட்டு கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கக்கோரி தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார். ஆனால் அவருடைய போராட்டத்திற்கு எந்த பலனும் கிடைக்காமல் போனது.கோவையில் இப்படி லியோனி ஒட்டுமொத்தமாக எல்லா பெண்களின் இடுப்பு பற்றியும் விமர்சிக்க அது தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு மகளிர் அமைப்பினரும் போலீசில் புகார் செய்துள்ளனர். தேர்தல் நேரத்தில் இதுபோல் பேசுவது, பெண்களின் வாக்குகளை திமுகவுக்கு எதிராக மாற்றும் நிலையை உருவாக்கும். லியோனி பேசியது உடனடியாக வீடியோ ஆதாரத்துடன் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் கொண்டு செல்லப்படுள்ளது.

MKSTALIN-UPDATENEWS360

அதைக்கேட்ட ஸ்டாலின் அதிர்ச்சியில் உறைந்துபோய் விட்டார் எனக் கூறப்படுகிறது. திண்டுக்கல் லியோனி, கலைஞர் டிவியின் பட்டிமன்ற ஆஸ்தான நடுவர் என்பதால் பெண்களை அவர் அவதூறாக பேசியது திமுகவுக்கு கிடைக்கும் பெண்களின் ஓட்டுகளுக்கு வேட்டு வைத்துவிடும் என்று உணர்ந்த ஸ்டாலின் அவரை அடக்கி வாசிக்கும்படி உத்தரவிட்டு இருக்கிறாராம். போதாக்குறைக்கு திமுகவின் அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோரும் “இப்படி ஒவ்வொருவரும் தேர்தல் நேரத்தில் பெண்களைக் கேலி செய்யும் விதமாக பேசினால் அது தேர்தலில் எதிரொலிக்கும்.

PK Stalin - Updatenews360

அதனால் ஏப்ரல் 6-ந் தேதி வரை அனைவரும் வரம்பு மீறி பேசுவதையும், பெண்கள் பற்றி கேலியாக கருத்து தெரிவிப்பதையும் தவிர்க்க வேண்டும்” என்றும் ஸ்டாலினை வற்புறுத்தி இருக்கிறார், என்கிறார்கள். இதுபற்றி அதிமுகவின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, தாத்தா கருணாநிதி, மகன் ஸ்டாலின், பேரன் உதயநிதி என மூவருமே பெண்களை கேலி விஷயத்தில் ஒரே மாதிரியான சிந்தனை கொண்டவர்கள். தேர்தல் நேரத்தில் மட்டும் என்று இல்லாமல் எல்லா சமயங்களிலும் அவர்கள் இவ்வாறு பேசுவது சாதாரணமான ஒன்று.

கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களே இப்படி பேசும்போது அவர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது? தேர்தலில் பெண்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே இதுபோல் பேசுவதை திமுகவினர் நிறுத்துவார்கள்” என்று குறிப்பிட்டார். எது எப்படியோ, பெண்கள் குறித்த திண்டுக்கல் லியோனியின் அநாகரீக பேச்சு, தேர்தல் நேரத்தில் திமுகவை திணற வைத்துள்ளது, என்றே சொல்லவேண்டும்!

Views: - 286

0

0