வெள்ளைத்தாளில் கையெழுத்து வாங்கி…வெறுங்கையில் கழிவுகளை அள்ள சொல்லி நெருக்கடி: உயிர்களில் விளையாடும் அதிகாரிகள்..கண்டுகொள்ளுமா கோவை மாநகராட்சி..!!

Author: Rajesh
22 March 2022, 3:00 pm
Quick Share

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாக்கடை கழிவுகளை தூய்மைப் பணியாளர்கள் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் கைகளால் சுத்தப்படுத்தும் அவல நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளிலும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஸ்மார்ட் சிட்டி என்ற அந்தஸ்தை பெற்றுள்ள கோவையில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

குளக்கரைகளில் அழகிய பூங்காக்கள், எல்.இ.டி விளக்குகள் மல்டி லெவல் பார்க்கிங் என அடுத்தடுத்த வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மட்டும் எந்த வித முன்னேற்றமும் அடையாமல் இன்னும் வெறும் கைகளால் சாக்கடைகளை சுத்தம் செய்யும் அவலம் தொடர்ந்து வருகிறது.

தினமும் காலையில் பணிக்கு வந்து நகரை சுத்தப்படும் இந்த பணியாளர்கள் இன்னும் ஒப்பந்த முறைப்படியே பணியை தொடர்கின்றனர். கிடைக்கும் குறைந்தபட்ச ஊதியத்திலும் அயராது உழைத்து வரும் இந்த பணியாளர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் உள்ளது மாநகராட்சி நிர்வாகம்.

பெரும்பாலான தூய்மைப் பணியாளர்கள் வெறும் கைகளாலேயே சாக்கடைகளை சுத்தம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கோவை மாநகராட்சி 78 வார்டு செல்வபுரம் பகுதியில் தூய்மைப்பணியாளர்களாக பணிபுரிந்து வருபவர்கள் சுப்பிரமணி , தர்மன் , செந்தில்குமார் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இரு நாட்களுக்கு முன்பு பேரூர் சாலையிலுள்ள செல்வபுரம் பகுதியில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார ஆய்வாளர் ராம் மற்றும் மேற்பார்வையாளர் மாணிக்கம் ஆகியோர் இம்மூவரையும் அடைப்பு எடுக்க அழைத்துச்சென்றுள்ளனர். அப்போது சாக்கடைக்குள் இறங்கித்தான் அடைப்பை எடுக்க முடியும் என்ற சூழலில் , கட்டாயம் அடைப்பை எடுக்க அதிகாரிகள் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பாதுகாப்பு உபகரணங்களின்றி தூய்மைப்பணியாளர் சுப்பிரமணி சாக்கடையில் இறங்கி அடைப்பை சுத்தம் செய்துள்ளார். இது குறித்து அவர் துறை அதிகாரிகளிடம் புகாரளித்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் சுகாதார ஆய்வாளர் மற்றும் மேற்பார்வையாளர் இருவரும் சுப்பிரமணியிடம், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல், சாக்கடை அடைப்பை எடுக்க வற்புறுத்தவில்லை எனவும், தாமாக சென்று அடைப்பை எடுத்ததாக கடிதம் எழுதச்சொல்லி மிரட்டியுள்ளனர்.

மேலும், வெள்ளை காகிதத்தில் கையெழுத்து வாங்கியதாக தூய்மைப்பணியாளர் சுப்பிரமணியம் தெரிவித்தார். மாநகராட்சி பகுதிகளில் தொடர்ச்சியாக பாதுகாபு உபகரணங்களின்றி தூய்மைப்பணியாளர்கள் பணி செய்ய அதிகாரிகள் வற்புறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 776

0

0