இது பரிசல் இல்ல பாடை : பாலம் இல்லாததால் இறந்தவர் சடலத்தை பாடைக் கட்டி லாரி டியூபில் ஆற்றை கடந்து எடுத்து செல்லும் அவலம்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 March 2022, 4:19 pm
Dead Body Floating - Updatenews360
Quick Share

தருமபுரி : நாகர்கூடல் அருகே நாகாவதி அணை பகுதியில் பாலம் இல்லாததால் லாரி டியூபில் பாடை கட்டி இறந்தவர் சடலத்தை ஆற்றை கடந்து கொண்டு சென்ற அவலம் அரங்கேறியுள்ளது.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள நாகர்கூடல் பகுதிகுட்பட்ட கழனிகாட்டூரில் நாகாவதி அணையின் நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. இப்பகுதி பெரும்பாலும் விவசாயத்தையே நம்பி உள்ள பகுதியாகும்.

இப்பகுதியில் உள்ளவர்கள் ஒரு சிலர் விவசாயம் செய்தும் மற்றவர்கள் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு வேலைக்காக சென்றுள்ளனர். இந்த கழனிகாட்டூர் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நாகாவதி ஆற்றின் மறுகரையில் தங்களுடைய நிலங்களில் வீடுகளை கட்டி குடியேறி விவசாயப் பணிகளையும் செய்து வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் அணையில் நீர் இருக்கும் போதெல்லாம் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பள்ளி கல்லூரி செல்லவும் பணிக்கு செல்வதற்கு கர்ப்பிணி பெண்கள் பிரசவ காலங்களில் மருத்துவமனைக்கு செல்வதற்கு 4 கிலோமீட்டர் தூரம் வனப்பகுதியில் கரடு முரடான அதிக அளவு மேடான பாதையில் சுற்றி செல்ல வேண்டும். அல்லது குறைந்த தொலைவில் உள்ள ஆற்றை கடக்க பரிசல்களில் செல்லவேண்டும் என்ற அபாயகரமான சூழல் நிலவி வருகிறது. அது மட்டுமல்லாமல் யாரேனும் இறந்துவிட்டால் அவர்களை புதைப்பதற்கு மற்றும் எரிப்பதற்கும் ஆற்றின் மறுகரையில் உள்ள சுடுகாட்டிற்கு தான் கொண்டுவர வேண்டும்.

அதனால் இக்கிராமத்தில் உள்ள பொது மக்கள் கடந்த 30 ஆண்டுகளாக கழனிகாட்டூர் பகுதியில் நாகாவதி அணை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டி கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். எவ்வளவு கோரிக்கை வைத்தாலும் எந்தவொரு அரசாங்கமும் அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காததால் இன்று வரை அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று 85 வயதுடைய சின்னசாமி என்பவர் உயிரிழந்ததை அடுத்து அவரின் உறவினர்கள் இறுதிச் சடங்கிற்காக ஆற்றின் மறுகரையில் உள்ள சுடுகாட்டிற்கு கொண்டுவர முடிவு செய்தனர்.

ஆனால் ஆற்றில் தண்ணீரின் அளவு அதிகமாக இருந்ததால் நடந்து கொண்டு வரமுடியாத சூழலில் லாரி டியூப்களை இணைத்து அதன் மேல் பாடையை வைத்து கட்டி இறந்தவரின் சடலத்தை அதன் மேல் வைத்து சுமார் 7 அடி ஆழம் உள்ள ஆற்றை நீந்தியவாறே உறவினர்கள் கடந்து சென்று இறுதி சடங்கை செய்தனர்.

இது போன்ற அபாயகரமான சூழலில் தாங்கள் வாழ்ந்து வருவதால் இனியாவது காலம் தாழ்த்தாமல் இப்பகுதியில் நாகாவதி அணையின் குறுக்கே பாலம் அமைத்து இப்பகுதி பொது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Views: - 1007

0

0