பேனர்களை அகற்றியதால் ஆத்திரம்… அலுவலகத்திற்குள் புகுந்து நகராட்சி ஆணையரை மிரட்டிய திமுக கவுன்சிலரின் கணவர்!!

Author: Babu Lakshmanan
22 March 2024, 12:59 pm
Quick Share

திமுக கட்சி டிஜிட்டல் பேனர்களை அகற்றியதால் நாகை நகராட்சி அலுவலகத்தில் புகுந்து திமுக நகராட்சி கவுன்சிலரின் கணவர் நகராட்சி ஆணையர் மற்றும் ஊழியர்களை மிரட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை நகராட்சி அலுவலர்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்தி வருகின்றனர். இதையடுத்து, கடந்த 18ந் தேதி நாகப்பட்டினம் மாவட்ட அலுவலக வளாகத்திற்கு எதிர்ப்புறம் உள்ள பஸ் நிலையம் எதிரே ஒட்டப்பட்ட சுவரொட்டிகள், விளம்பர பேனர்கள் மற்றும் சுவர் விளம்பரங்களை நகராட்சி ஊழியர்கள் அழிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக 14-வது வார்டு நகர்மன்ற உறுப்பினரின் கணவர் முகமது அபுபக்கர் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று, படங்கள் அகற்றப்பட்டது தொடர்பாக ஆணையர் மற்றும் ஊழியர்களை மிரட்டியும், தகாத வார்த்தையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. மேலும், கதவினை காலால் எட்டி உதைத்தும் அடாவடியில் ஈடுப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து நகராட்சி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் சார்பில் நாகை வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகை நகராட்சி அலுவலகத்துக்குள் நுழைந்து அங்குள்ள ஊழியர்களை கவுன்சிலரின் கணவர் முகமது அபுபக்கர் மிரட்டுவது தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Views: - 168

0

0