பேரம் பேசிய ஆடியோ லீக்… திமுக நகர்மன்ற தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்… சொந்தக்கட்சியினரே நெருக்கடி..!!

Author: Babu Lakshmanan
28 February 2024, 3:03 pm
Quick Share

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகர்மன்ற தலைவர் (திமுக) எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர 15-கவுன்சிலர்கள் நகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள குளச்சல் நகராட்சியின் நகர்மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த நசீர் தேர்வு செய்யப்பட்டார். 24 வார்டுகள் கொண்ட குளச்சல் நகராட்சியில் நகர்மன்ற தலைவராக திமுக தலைமை அதிகாரப் பூர்வமாக அறிவித்த ஜாண்சன் என்பவர் போட்டியிட்ட நிலையில், திமுகவை சேர்ந்த நசீர் அவரை எதிர்த்து போட்டியிட்டார். இருவரும் தலா 12-வாக்குகள் எடுத்த நிலையில், குலுக்கல் முறையில் நசீர் நகர்மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

மூன்றாவது முறையாக நகர்மன்ற தலைவராக பதவியேற்ற நசீர், சில கவுன்சிலர்களின் வார்டுகளில் வளர்ச்சி பணிகள் செய்யாமல் புறக்கணித்து வந்ததாகவும், நகராட்சி ஒப்பந்தங்களில் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனிடையே, நகர்மன்ற தலைவர் நசீர், நகர்மன்ற துணைத் தலைவர் ஷெர்லி பிளாரன்ஸின் கணவர் குமார் என்பவரையும், கவுன்சிலர் ஷஜிலா என்பவரின் கணவர் கலீல் என்பவரையும் தொலை பேசியில் தொடர்பு கொண்டு, பெரிய பெரிய ஒர்க்குகளை கொடுத்துள்ளதாகவும், அந்த ஒர்க்குகள் அலார்ட் ஆகி வந்து விடும் என்றும், தனியா தின்னும் ஆசை இல்லை என்றும், நமக்கும் ஏதாவது பாக்கணும், எல்லாருக்கும் ப்ரோயஜனம் படுமாறு இருக்கும் என்றும் கூறி முறைகேட்டிற்கு ஒத்துழைக்குமாறும் கேட்டுள்ளார்.

இந்த நிலையில், இந்த ஆடியோ ஆதாரங்களுடன் நேற்று முன்தினம் நெல்லை மண்டல நகராட்சி அலுவலகத்திற்கு சென்ற திமுக கவுன்சிலர்கள் 9 பேர் உட்பட 15 கவுன்சிலர்கள் முறைகேட்டில் ஈடுபட முயன்ற நகர்மன்ற தலைவர் நசீர் மீது நடவடிக்கை எடுக்க புகாரளளித்தனர். மேலும், மாலை குளச்சல் நகராட்சி அலுவலகத்திற்கு வந்த அவர்கள் நகாராட்சி ஆணையர் வெங்கட லெஷ்மணனிடம் ஆடியோ ஆதாரங்களை அளித்து முறைகேட்டில் ஈடுபட முயன்ற நகர்மன்ற தலைவர் நசீர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மனு அளித்தனர்.

திமுக வை சேர்ந்த நகர்மன்ற தலைவருக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நகர்மன்ற தலைவர் நசீர் துணைத்தலைவர் ஷெர்லி பிளாரன்ஸ் கணவர் குமார் மற்றும் கவுன்சிலர் ஷஜிலா வின் கணவர் கலீல் என்பவருடனும் பேசியதாக கூறப்படும் ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆடியோ குறித்து நகர்மன்ற தலைவர் நசீரை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்க முயன்ற போது விளக்கமளிக்க மறுத்துவிட்டார்.

Views: - 608

0

0