‘சாதிப் பெயரை சொல்லி திட்டுனாரு’… திமுக மேயருக்கு திமுக கவுன்சிலர்களே போர்க்கொடி.. நெல்லை மாமன்றக் கூட்டத்தில் கோஷ்டி மோதல்!!

Author: Babu Lakshmanan
28 April 2023, 3:46 pm

நெல்லை ;திமுக மாமன்ற உறுப்பினர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாகவும், மேயருடன் திமுக ஒரு தரப்பு கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் திருநெல்வேலி மாநகராட்சி சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் இன்று காலை மைய அலுவலகத்தில் உள்ள ராஜாஜி மண்டபத்தில் துவங்கியது. திருநெல்வேலி மாநகராட்சியில் 55 வார்டு உறுப்பினர்கள் உள்ள நிலையில், திமுக கூட்டணிக்கு 51 உறுப்பினர்கள் உள்ளனர். அதிமுகவுக்கு நான்கு உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்த நிலையில், 30 உறுப்பினர்கள் மட்டுமே கூட்டத்திற்கு வந்திருந்தனர். கூட்டம் மேயர் சரவணன் தலைமையில், துணை மேயர் ராஜு மற்றும் ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் துவங்கியது. தமிழக அரசு கொண்டு வந்துள்ள மக்கள் நலத் திட்டங்களுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் தொடங்கியது. திமுக மாமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஆனால் 27 உறுப்பினர்களுக்கு மேல் அவையில் உள்ளதால் நேரம் இருப்பதாக ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி பதிலளித்தார்.

இதனை ஏற்க மறுத்து, அவையின் மையப்பகுதியில் நின்று முழக்கங்கள் எழுப்பிய திமுக கவுன்சிலர்களை சமாதானப்படுத்தி அவரவர் இருக்கைக்கு ஆணையாளர் அனுப்பி வைத்தார். ஆனாலும் அவர்கள் தங்கள் இடங்களில் நின்று கொண்டு அவசரக் கூட்டத்தில் உள்ள தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது, அவசர கூட்டத்தை மொத்தமாக ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அவசரக் கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய பணிகளுக்கு டெண்டர் கோரப்படுவதற்கான விண்ணப்பங்கள் அவையின் அனுமதிக்காக வைக்கப்பட்டிருந்தது.

இதனை குறிப்பிட்டு பேசிய மேயர், தொடர்ந்து தீர்மானங்களை ஒத்திவைத்து சென்றால் மக்கள் பணி செய்ய முடியாது என தெரிவிக்க, கூட்டத்தில் களேபரம் ஏற்பட்டது. மேயர் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கவுன்சிலர்கள் ஒருவருக்கொருவர் வார்த்தைகளால் மோதிக்கொண்டனர். வார்த்தை போர் கைகலப்பு ஏற்படுத்தும் சூழலை ஏற்படுத்தியது. மாநகராட்சி ஆணையாளர் சிவகிரிஷ்ண மூர்த்தியின் சமாதான முயற்சி தோல்வியில் முடிந்தது.

தொடர்ந்து அமளி ஏற்பட்டு வந்ததால் கூட்டத்தை பத்து நிமிடம் ஒத்தி வைப்பதாக கூறி மேயர் அவையில் இருந்து வெளியேறினார். அமளி தொடர்ந்து நீடிக்கவே கூட்டம் ரத்து செய்யப்படுவதாக துணை மேயர் அறிவித்தார். இதனிடையே 15வது வார்டு மாமன்ற உறுப்பினர் அஜய் மண்டபத்தின் மையத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேயர் தன்னை ஜாதி பெயரைச் சொல்லி திட்டியதாகவும், அவரை மாற்ற வேண்டும் அவர் நடத்தும் அவையில் என்னால் இருக்க முடியாது என அவர் முழக்கமிட்டார்.

பதட்டமான சூழல் ஏற்பட்ட நிலையில் காவல்துறையினர் அவைக்கு வெளியே குவிக்கப்பட்டனர். கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதால் அனைவரும் வெளியேற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அஜய்யுடன் பல்வேறு தரப்பினர் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவரையும் அங்கிருந்து வெளியேற்றினர்.

இந்த நிலையில், மேயர் ஆதரவு தரப்பினர் ஒரு தனி நபருக்காக மேயருக்கு எதிராக கவுன்சிலர்கள் போராட்டம் நடத்துகின்றனர் என ஆக்ரோசத்துடன் தெரிவித்தார். மறைமுகமாக திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலாளரை அவர்கள் குற்றம் சாட்டினார். அவையில் இருந்து வெளியேறிய கவுன்சிலர்கள் அனைவரும் மாநகராட்சியின் சிறிய கூட்ட அரங்கில் கூடி ஆலோசனை நடத்தினர். அதிலிருந்தும் மேயர் ஆதரவு கவுன்சிலர்கள் ஒரு சிலரை வெளியேற்றியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திமுக மாமன்ற உறுப்பினர்களே திமுக மேயருக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வதும் பரபரப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலாளரும், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வகாப் ஆதரவு பெற்ற துணை மேயர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் மேயரை மாற்ற வேண்டும் என கோரிக்கையுடன், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேருவை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

அவர் துணை மேயர் உள்ளிட்ட உறுப்பினர்களை சமாதானப்படுத்தி திருநெல்வேலிக்கு அனுப்பி வைத்தார். இரண்டு மாத காலத்திற்குள் மீண்டும் திருநெல்வேலி மாமன்ற கூட்டத்தில் இலை மறை காயாக இருந்த திமுக கோஷ்டி பூசல் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • gautham menon and yashika aannand spotted in beach in dd next level trailer பிரபல நடிகையுடன் கடற்கரையில் உல்லாசம்? கையும் களவுமாக மாட்டிய கௌதம் மேனன்!