என் தொழிலை அழிக்க திமுக எம்எல்ஏ முயற்சி… ‘நாங்க குடும்பத்தோடு தற்கொலை செய்வோம்’… குடும்பத்துடன் வியாபாரி கண்ணீர்!!

Author: Babu Lakshmanan
11 October 2023, 11:17 am

தனது வியாபாரத்தை அளிக்கும் நோக்குடன் வேடசந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் மற்றும் வடமதுரை பேரூராட்சி தலைவர் செயல்படுவதாக கடையின் உரிமையாளர் கண்ணீர் மல்க குற்றம்சாட்டியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவுக்கு உட்பட்டது வடமதுரை பேரூராட்சி. இந்தப் பேரூராட்சியின் மையப்பகுதி பேருந்துகள் நிறுத்துமிடம் அருகே கடந்த 25 ஆண்டுகளாக மோகன்ராம் என்பவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.

இவரது கடை முன்பு கடந்த 25 நாட்களுக்கு முன்பு, பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக கழிவுநீர் வாய்க்காலை சுத்தம் செய்கிறோம் என்று கூறி கழிவுநீர் வாய்க்காலை உடைத்துள்ளனர். ஜவுளி கடைக்கு உள்ளேயே யாரும் செல்ல முடியாத அளவிற்கு கழிவு நீர் வாய்க்காலை சரி செய்யாமல் அப்படியே விட்டு விட்டனர். இதனால் ஜவுளி கடைக்குள் யாரும் செல்ல முடியவில்லை.

இந்த நிலையில், திமுக எம்எல்ஏ காந்திராஜன் தன்னை பழிவாங்கும் நோக்கில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட கடையின் மோகன்ராம் உரிமையாளர் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக கடையின் உரிமையாளர் மோகன்ராம் கூறியதாவது :- கடந்த 25 ஆண்டுகளாக இதே பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறேன். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேடசந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் தலையிட்டு பிரச்சனை செய்தார். இதையடுத்து, தொடர்ந்து என்னை பழிவாங்கும் நோக்குடன் பல்வேறு செயல்களை செய்து வருகிறார்.

கடந்த கொரோனா காலகட்டத்தில் பல்வேறு இன்னல்களை சந்தித்து, தற்போது எனது தொழிலை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், வங்கியில் 95 லட்ச ரூபாய் கடன் வாங்கி வியாபாரம் செய்து வருகிறேன். இந்நிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் மற்றும் பேரூராட்சி தலைவர் நிரூபாராணி கணேசன் ஆகியோர் இணைந்து, எனது ஜவுளிக்கடையை முடக்கும் நோக்குடன், கடந்த 25 நாட்களுக்கு முன்பு ஜவுளிக்கடை முன்பாக சாக்கடையில் அடைப்பு உள்ளது, அதை சரி செய்கிறோம் என்று ஜேசிபி வைத்து குழி தோண்டினர்.

ஆனால் தற்போது வரை கழிவு நீர் வாய்க்காலை சரி செய்யவில்லை. நானும், பேரூராட்சி நிர்வாகம் மாவட்ட ஆட்சியர் தமிழக முதல்வர் மற்றும் தமிழக ஆளுநர் தமிழக சபாநாயகர் உள்ளிட்ட அனைவருக்கும் புகார் மனு வழங்கி விட்டேன், தொடர்ந்து, வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன் என்னை அழிக்கும் நோக்குடன் செயல்பட்டு வருகிறார்.

பல்வேறு இன்னல்களுக்கு இடையே வணிகம் செய்து வரும் என்னை போன்ற வணிகர்களை அழிக்கும் நோக்குடன் காந்தி ராஜன் செயல்பட்டு வருகிறார். மேலும், யாரிடம் புகார் வேண்டுமானாலும் கொடுங்கள், எனக்கு கவலை இல்லை. என்னிடம் தான் விசாரணை நடக்கும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றும் மிரட்டுகிறார்.

இதனால், கடந்த 25 நாட்களாக எனது ஜவுளி தொழில் பாதித்துள்ளது. ஆகவே, தமிழக முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கவில்லை எனில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வோம், என்று கண்ணீர் மல்க பேட்டி அளித்தார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!