ஆசைக்கிணங்க மறுத்ததால் பதவி பறிப்பு… பெண்களுக்கு பாதுகாப்பே இல்ல ; திமுக எம்எல்ஏ மீது பெண் நிர்வாகி பரபரப்பு புகார்!!

Author: Babu Lakshmanan
29 August 2023, 5:06 pm

திருத்தணி தொகுதி திமுக எம்எல்ஏ மீது சக கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் புகார் அளித்து வீடியோவை வெளியிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராகவும், திருத்தணி தொகுதி எம்எல்ஏவுமாக இருப்பவர் சந்திரன். இவர் மீது திருவள்ளூர் மாவட்ட மகளிர் அணியைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் குற்றம்சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார். அந்த வீடியோவில், ஆசைக்கிணங்காததால் தனது பதவியை பறித்து விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், தன்னிடம் தகாத முறையில் இருக்க ஆசைப்பட்டு, மகளிர் அணியை சேர்ந்த பெண்களிடம் அவருடைய செல்போன் நம்பரை கொடுத்து பேச சொன்னதாகவும், ஆனால் இது போன்ற கேவலமான பிழைப்பை பிழைக்க மாட்டேன் என கூறிவிட்டதாகவும் கூறினார். நாங்கள் நல்ல குடும்பத்தில் இருந்து கழகத்திற்காக பணியாற்ற வந்துள்ளதாகவும், கழகத்திற்கு வரும் பெண்கள் அனைவரும் இவ்வாறு இருப்பார்கள் என நினைக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பிய அவர், திமுகவில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் இடத்தில் இருக்கும் மாவட்ட செயலாளர் மகளிர் அணிக்கு இது போன்ற அச்சுறுத்தல் ஏற்படுத்தலாமா? என்று கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து புகார் தெரிவிக்க அறிவாலயம் சென்றபோது, அவரை பார்க்க முடியாததால் இரண்டாம் கட்ட தலைவர்களிடம் இது குறித்து புகார் அளித்தும், எந்தவிட நடவடிக்கை எடுக்கவில்லை என்று நினைப்பதாக அந்த பெண் நிர்வாகி கூறினார்.

தன்னை பொறுப்பில் இருந்து நீக்கி விட்டு, திமுக உறுப்பினராக இல்லாதவர்களுக்கு எல்லாம் பணம் வாங்கிக்கொண்டு பதவி வழங்கிக் கொண்டிருப்பதாகவும், தலைவர் கவனத்திற்கு செல்லும் வரை இந்த வீடியோவை நான் பதிவிட்டு கொண்டே இருப்பேன் என்றும் அவர் கூறினார். தற்போது வீடியோவை வெளியிட்டுள்ளதால் தன்னை மிரட்டுவார்கள் என்று கூறிய அந்தப் பெண் நிர்வாகி, திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் சந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் எப்போது நடந்தது என்று தெரியாத நிலையில், இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?