பாஜகவை வம்புக்கு இழுக்க வேண்டாம்… சட்டம் தன் கடமையை செய்தது : எம்எல்ஏ வானதி சீனிவாசன் கருத்து!!

Author: Udayachandran RadhaKrishnan
4 April 2023, 4:48 pm
Vanathi - Updatenews360
Quick Share

கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் தாகம் தீர்ப்பதற்காக கோவை ராம்நகர் பகுதியில் பாஜக சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.

இதனை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாஜக மகளிர் அணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவை மாநகராட்சியை பொறுத்தவரை பல்வேறு கோரிக்கைகளை சட்டமன்றம் உட்பட பல இடங்களில் கொடுத்து வருவதாக தெரிவித்தார்.

கோவையில் குடிநீர் பிரச்சனை என்பது பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்த அவர், ஒரு சில இடங்களில் 15 நாட்களுக்கு ஒருமுறை 30 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வருவதாக தெரிவித்தார்.

சிறுவாணியில் நீர் குறைவாக இருந்தால் லாரிகள் மூலமாவது மக்களுக்கு குடிநீர் வழங்குவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டுமென தெரிவித்தார்.

கோடைக்காலம் தூங்கு முன்பே குடிநீர் பிரச்சனை மிகபெரிய பிரச்சனையாக மாறி வருவதாக தெரிவித்தார்.மேலும் மாநகராட்சி நிர்வாகம் அண்ணா மார்க்கெட் பகுதியில் சுமை தூக்கும் பணியாளர்களுக்கு தகுந்த ஏற்பாடு செய்து தர வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில் மத்திய அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி உள்ளது என தெரிவித்தவர் மாநில அரசும் பொதுமக்களுக்கு தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
காவிரி டெல்டா பகுதிகளை அதிமுக அரசு ஏற்கனவே வேளாண் மண்டலமாக அறிவித்துள்ள நிலையில், அப்பகுதியில் நிலக்கரி சுரங்கள் அமைப்பது குறித்து மாநில அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்தான கேள்விக்கு இதுதான் இன்றைய கேள்வியா எனவும் பாஜக மாநில தலைவர் கூட்டணி குறித்து தேசிய தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும் என கூறியிருக்கிறார். இதில் எந்த ஒரு குழப்பமும் இல்லை என பதிலளித்தார்.

கலாச்சேத்ரா விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தான் முதலில் வந்ததாக தெரிவித்த அவர் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க முன்வர வேண்டுமென கேட்டுக்கொண்டார்.


மேலும் பல்வேறு இடங்களில் விசாகா கமிட்டி அமைக்கப்படாமல் உள்ளது எனவும் மாநில அரசு அனைத்து இடங்களிலும் விசாகா கமிட்டி உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டுமெனவும் கூறினார்.

ராகுல் காந்தி விவகாரத்தில் நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கி உள்ளதாகவும் இதற்கும் பாஜகவுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என தெரிவித்த அவர், சட்டம் அதன் கடமையை செய்து வருகிறது எனவும் இதற்கு பாஜக மீது பாய்வது என்பது முறையானது அல்ல என தெரிவித்தார்.

தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் மத்திய அரசு நிலக்கரி மற்றும் எரிபொருள் எடுப்பதற்கு அனுமதி வழங்குமாயின் அதிலிருந்து விளக்கு அளிப்பது குறித்து மாநில அரசு தான் மத்திய அரசுடன் இணைந்து பேச வேண்டும் என தெரிவித்தார்.

Views: - 188

0

0