குடிநீர் பஞ்சம்.. தென்னை மரங்களை காப்பாற்ற லாரிகளில் நீர் வாங்கும் விவசாயிகள்.. எஸ்பி வேலுமணி ஆட்சியரிடம் புகார்!

Author: Udayachandran RadhaKrishnan
6 May 2024, 2:51 pm
SPV
Quick Share

குடிநீர் பஞ்சம்.. தென்னை மரங்களை காப்பாற்ற லாரிகளில் நீர் வாங்கும் விவசாயிகள்.. எஸ்பி வேலுமணி ஆட்சியரிடம் புகார்!

கோவை மாவட்டத்தில் குடிநீர் தட்டுபாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கோவை மாவட்ட ஆட்சிதலைவரிடம் இன்று மனு அளித்தனர்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன் ,அம்மன் அர்ஜுனன், பி.ஆர்.ஜி அருண்குமார், ஏ.கே.செல்வராஜ், அமுல்கந்தசாமி ஆகியோர் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் கடுமையான குடிநீர் பிரச்சினை இருக்கின்றது என்றார்.

குடிநீர் பிரச்சினை வராத அளவிற்கு அதிகமான கூட்டுகுடிநீர் திட்டங்களை அதிமுக ஆட்சியில் செய்து இருந்தோம் எனவும் அதிமுக ஆட்சியில் குளங்கள் , அணைகள் தூர் வாரப்பட்டு நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தபட்டது எனவும் ஆனால் இப்போது இவை செயல்படுத்த படுவதில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

கோவை மாவட்டத்தில் பில்லூர், சிறுவாணி, அழியார் அணைகள் முக்கிய குடிநீர் ஆதாரங்களாக உளல நிலையில் இந்த அணைகள் தூர் வாரி இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

புதிய ஆழ்குழாய் கிணறுகள் கூட இப்போது அமைப்பதில்லை எனவும், இது போன்ற குடிநீர் பிரச்சினை வரும் போது லாரிகள் மூலம் தண்ணீர் கொடுக்க ஆட்சியரிடம் வலியுறுத்த பட்டதாகவும் தெரிவித்தார்.

பல இடங்களில் அதிகபட்சமாக 20 நாட்கள் வரை குடி தண்ணீர் வழங்கப்படுவதில்லை எனவும், மாநகராட்சி நிர்வாகம் இதை முறையாக கவனிப்பதில்லை எனவும், முறையாக குப்பைகள் கூட எடுக்க வில்லை எனவும் கூறியதுடன், சிறுவாணி அணையில் கடைசி 5 அடி தண்ணீர் தேக்க விடுவதில்லை இது குறித்து கேரள அரசிடம் பேச வேண்டும் எனவும், அத்திகடவு, அவினாசி திட்டத்தையும் இந்த அரசு கண்டு கொள்ளவில்லை எனவும் வருத்தம் தெரிவித்தார்.

எஸ்ஐஎச்எஸ் காலனி பாலம் விரைத்து முடிக்க வேண்டும், கோவையில் நடைபெற்று வரும் அரசின் திட்டங்களை வேகமாக முடிக்க வேண்டும் என வலியுறுத்திய அவர்,பொதுகழிப்பிடங்கள் கூட சுத்தம் செய்யப்படுவதில் லை எனவும் கூறினார்.

மேலும் போர்வெல் போட விண்ணப்பித்தால் அனுமதி வழங்கப்படாமல் இருப்பதாகவும், இதற்கு உடனே அனுமதிக்கவேண்டும் எனவும், சாலைகள் பழுதடைந்த நிலையில் உள்ள சூழலில் அவற்றை வேகமாக போட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

பொள்ளாச்சியில் தென்னை விவசாயிகள் மரங்களை காப்பாற்ற லாரியில் தண்ணீர் வாங்கி ஊற்றுவதாகவும் ஆனால் அதையும் அதிகாரிகள் தடுக்கின்றனர் எனவும் கூறிய அவர், இதை தடுக்க கூடாது என ஆட்சியரிடம் வலியுறுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.

பல இடங்களில் மண் எடுக்க விடுவதில்லை எனக்கூறிய அவர், கோவை மாவட்ட நிர்வகம் முழுமையாக இயங்குவதில்லை என்றும் குடிநீர் பிரச்சினை விரைவில் சரி செய்ய வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

Views: - 136

0

0