குடிபோதையில் இளைஞர் ரகளை : தட்டிக்கேட்ட முதியவர் மற்றும் இளம் பெண்ணுக்கு சரமாரி வெட்டு…!

Author: kavin kumar
20 February 2022, 10:42 pm
Quick Share

விருதுநகர் : ராஜபாளையத்தில் குடிபோதையில் தகராறு செய்த இளைஞரை தட்டி கேட்ட முதியவர் மற்றும் அவரது மகளை அரிவாளால் வெட்டிய சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் டிபி மில்ஸ் சாலையில் உள்ள துரைசாமிபுரம் செங்குட்டுவன் தெருவை சேர்ந்தவர் பிள்ளையார். 55 வயதான இவர் உடல் நலக் குறைவு காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்திருக்கிறார். இன்று மதியம் இதே பகுதியை சேர்ந்த இசக்கிராஜ் என்ற இளைஞர் குடிபோதையில், அப்பகுதியில் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் தனக்கு தொந்திரவு ஏற்படவே, பிள்ளையார் அந்த இளைஞரை சத்தம் போட்டு அங்கிருந்து விரட்ட முயன்றுள்ளார்.இதில் ஆத்திரம் அடைந்த இசக்கிராஜ், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் முதியவரை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் அவருக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டதை அடுத்து, அவர் மயங்கி சரிந்துள்ளார். இதை பார்த்த பிள்ளையாரின் மகள் மதீஸ் அனிதா, தாக்குதலை தடுக்க முயன்றுள்ளார். அப்போது அவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு இசக்கி ராஜ் அங்கிருந்து தப்பி விட்டார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இருவரும், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து அரசு மருத்துவமனையில் வைத்து காயமடைந்தவர்களிடம் விசாரணை நடத்திய காவல் துறையினர் தப்பி ஓடிய இசக்கி ராஜை தேடி வருகின்றனர்.

Views: - 418

0

0