15 வயது சிறுமி தாக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்…காதலுடன் சேர்ந்து அரங்கேற்றிய நாடகம் அம்பலம்: போக்சோவில் கைதான பொறியியல் மாணவன்..!!

Author: Rajesh
21 April 2022, 6:56 pm
Quick Share

திருவாரூர்: ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்ததை மறைக்க தன்னை யாரோ அடித்தது போல சிறுமி நாடகமாடிய விவகாரம் அதி

திருவாரூர் அருகே வசித்து வரும் தந்தையை இழந்த 15 வயது சிறுமி தனது அத்தை வீட்டில் தாயுடன் தங்கி வசித்து வருகிறார். பத்தாம் வகுப்புடன் பள்ளிக் கல்வி படிப்பை நிறுத்திய இவர் வீட்டில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு சிறுமியை வீட்டில் உள்ளவர்கள் கடைக்கு பொருட்கள் வாங்க அனுப்பி வைத்துள்ளனர். அப்போது தனது தெருவிலுள்ள கடை பூட்டி இருந்ததால் பக்கத்து தெருவில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்கி சிறுமி சென்றுள்ளார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 2 பேர் உருட்டுக்கட்டையால் சிறுமியின் பின்தலையில் தாக்கியதாகவும், அரை மயக்கத்துடன் திரும்பிப் பார்த்தபோது அவரது முன்னந்தலையிலும் கட்டையால் தாக்கி மயக்கமடைந்த அவரை இரண்டு கைகளையும் பின்னால் வைத்து கட்டி வாயில் துணியை வைத்து தூக்கிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடைக்கு சென்ற சிறுமியை காணவில்லை என்று அவரது அத்தை மற்றும் அம்மா ஆகியோர் தேடி உள்ளனர். இதுகுறித்து குடவாசல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும் சென்றுள்ளனர். ஒரு மணி நேரம் கழித்து சிறுமி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில்  யாரும் குடி இல்லாத ஒரு வீட்டில் மயக்கத்தில் கிடந்ததாக அந்த வழியாக வந்தவர் பார்த்துவிட்டு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து குடவாசல் காவல்துறையினர் விசாரித்து வந்தனர்.

சிறுமியை இரவு நேரத்தில் கையை கட்டி வாயை பொத்தி தூக்கிச் சென்றுள்ளதாலும், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சிறுமி கிடந்ததால் ஏதேனும் பாலியல் துன்புறுத்தலாக இருக்குமா என்கிற ரீதியில்  நன்னிலம் துணை காவல் கண்காணிப்பாளர் இளங்கோ தலைமையில் மூன்று பெண் காவல் ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் தொடர்ந்து 12 மணி நேரத்திற்கும் மேலாக சிறுமியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

இந்த விசாரணையில் 15 வயது சிறுமிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பொறியியல் படிக்கும் மாணவனான சந்தோஷ் என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் வீட்டில் பொருட்கள் வாங்க மளிகை கடைக்கு சிறுமியை அவரது வீட்டினர் அனுப்பிய போது சிறுமி சந்தோசை சந்தித்து தனிமையில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

நீண்ட நேரம் அவர்கள் பேசிக் கொண்டிருந்ததால் கடைக்கு பொருட்கள் வாங்க சென்ற சிறுமியை காணவில்லை என்று அவரது வீட்டார் எங்கு பார்த்தாலும் தேடி அலைந்துள்ளனர். இந்த தகவல் சிறுமிக்கு தெரியவரவே வீட்டில் மாட்டி கொள்வோம் என்பதால் தானே தனது கைகளைக் கட்டிக் கொண்டு பாழடைந்த வீட்டில் மயக்கம் போட்டு கிடப்பது போன்று நடித்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்தவர்கள் சிறுமியை மயக்க நிலையில் இருப்பதாக நினைத்து அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அதன்பிறகு சிறுமி வீட்டாரையும் காவல்துறையினரையும் திசை திருப்பும் வகையில் தன்னை அடையாளம் தெரியாத இரண்டு பேர் உருட்டுக் கட்டையால் தலையில் தாக்கி கையை கட்டி தூக்கிச் சென்றதாக கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமிக்கு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து சிறுமியின் செய்கையில் சந்தேகமடைந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் மேற்கண்ட உண்மைகள் தெரிய வந்தது.

இதையடுத்து காவல்துறையினர் பொறியியல் மாணவரான சந்தோஷ் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Views: - 451

0

1