மதுரை மாநாடு தான் திருப்புமுனை… இபிஎஸ் கோட்டைக்கு செல்வது உறுதி.. முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பரபர பேச்சு..!!

Author: Babu Lakshmanan
3 August 2023, 12:10 pm

கோவை : எம்.ஜி.ஆர்., துவக்கிய கட்சியை யாராலும் அழிக்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள அதிமுக மாவட்ட இதய தெய்வம் மாளிகையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மதுரையில் நடைபெறும் மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கோவை புறநகர், தெற்கு, வடக்கு மாநகர் மாவட்டம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். அப்போது, விழாவில் முன்னாள் அமைச்சர் வேலுமணி, அதிமுகவின் வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறவுள்ளதாகவும், முதல்வர் பதவியிலிருந்து ஸ்டாலினை இறக்கவே இந்த மாநாடு நடைபெறுவதாக கூறியவர், மு.க. அழகிரி அதிமுக இனிமேல் கிடையாது, அழிக்க போறோம் என்று கூறியதை குறிப்பிட்டு, எம்.ஜி.ஆர்., துவக்கிய கட்சியை அழிக்க முடியாது என்றும், தற்போது பொன்விழா கொண்டாட உள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் அதிகமான திட்டங்களை வழங்கியவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்றும், அரசாங்க பணத்தை எடுத்து குடும்பமாக செம்மொழி மாநாட்டை நடத்தி கோவையை திமுக அழித்து சென்றார்கள் என்று குறிப்பிட்டு, அதனை கண்டித்து 2010ல் கோவையில் ஜெயலலிதா தலைமையில் மிகப்பெரிய ஆர்பாட்டமும், கோவையை தொடர்ந்து, திருச்சி, மதுரையில் நடந்த ஆர்பாட்டமே கோட்டைக்கு ஜெயலலிதா சென்றதற்கு காரணம் என்றவர், அதுபோன்ற இப்போது மதுரையில் மாநாடு நடைபெறுவதாகவும், மதுரை மாநாடு முடிந்து எடப்பாடி கோட்டைக்கு செல்லும் சூழல் உள்ளதாகவும், நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வரும் என்றும் சூசகமாக தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில் 20,000 போராட்டங்கள் நடத்தி திமுகவின் சித்து வேலைகள் செய்ததாகவும், முறைகேடு செய்து ஆட்சிக்கு வந்தவர்கள் என்றவர், முதல்வர் ஸ்டாலினுக்கு எதுவும் தெரியவில்லை என்றும், எதையும் செய்வதில்லை என்றும் குற்றச்சாட்டினார். விலைவாசி உயர்வுடன், மணல், கல் எதையும் எடுக்க முடிவதில்லை என்றும், காரணம் அனைத்திலும் லஞ்சம் என்றவர், ஓராண்டில் 30,000 கோடி லஞ்சம் என அக்கட்சியின் நிதி அமைச்சராக இருந்தவர் சொன்னதுபோன்று தான் என்றும் சாடினார்.

அதிமுக சென்னையை விட கோவை மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்களை கொடுத்ததாகவும், மெட்ரோ திட்டம் கூட அதிமுக அறிவித்தது தான் என சுட்டிக்காட்டி, கோவை மாவட்டத்திற்கு 10 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை வழங்கியது அதிமுக அரசு என்றவர், நியாயத்திற்கு புறம்பாக காவல்துறை அதிமுக மீது பொய் வழக்குபதிவு செய்வதாகவும், எப்போது வேண்டுமானாலும் அதிமுக ஆட்சிக்கு வரும் என்பதை நினைவு வைத்துக்கொள்ளுங்கள் என்றார்.

எடப்பாடி பொதுச்செயலாளர் ஆன பிறகு இளைஞர்கள் அதிமுகவில் தான் படைப்படையாக சேர்வதாகவும், மாணாக்கர் சமூகத்திற்கு அதிகமாக செய்தது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்றும், ஜெயலலிதா வழியில் எடப்பாடி 7.5% இட ஒதுக்கீடு உட்பட எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வந்தவர் என்று சுட்டிக்காட்டி, 600க்கும் மேற்பட்டோர் மருத்துவம் படிப்பதற்கு எடப்பாடி தான் காரணம் என்றவர், நீட் கொண்டு வந்தது திமுக தான் என்றும், திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் ரத்து என்றார்கள் என்றும், ஆனால் மாணவர்கள் பலர் உயிரிழந்ததாகவும் வருத்தம் தெரிவித்தார்.

எடப்பாடியாருக்கு ரசிகர்கள் கூட்டம் உள்ளதாகவும், மதுரை மாநாட்டிற்கு போக்குவரத்து வசதி, உணவு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என்றும், குழு அமைத்து மதுரை மாநாட்டிற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்பி வேலுமணி கூறியதாவது :- அதிமுக கோவை 3 மாவட்டம் சார்பாக ஒரு லட்சம் பேர் மதுரை மாநாட்டில் கலந்துக்கொள்ள உள்ளனர். சில மாவட்டங்களுக்கு சென்றபோது, எழுச்சியை பார்த்தால் திமுக ஆட்சி போதும், எடப்பாடி ஆட்சிக்கு வர வேண்டும் என்று பொதுமக்கள் நினைக்கின்றனர். எந்த திட்டம் பார்த்தாலும் அதிமுக அறிவித்தது தான், 2.5 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் எதுவும் நடைபெறவில்லை.

மதுரை மாநாட்டுக்குப் பிறகு 40 தொகுதியும் அதிமுக வெல்லும். சுகாதாரத்துறை மட்டுமின்றி அனைத்து துறைகளும் செயலிழந்து முடங்கி உள்ளது. அதிமுக ஆட்சியில் கொரோனா வந்தபோது, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் எடப்பாடி பழனிசாமி நேரடியாக கண்காணித்ததை குறிப்பிட்டார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!