நள்ளிரவில் விசிக பிரமுகர் கைது… பெண் கொடுத்த பரபரப்பு புகாரில் நடவடிக்கை.. கட்சியினர் குவிந்ததால் பதற்றம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
29 June 2023, 9:24 am
VCK - Updatenews360
Quick Share

வேலுார் பாகாயத்தை சேர்ந்தவர் துர்கா – வெங்கடேஷன் தம்பதியினர். இவர்களின் எதிர்வீட்டை சேர்ந்தவர் சக்திவேல். இந்நிலையில் மனைவி துர்கா கணவர் வெங்கடேஷ் ஆகிய இருவர் இடையே கடந்த 26 ஆம் தேதி இரவு தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது எதிர் வீட்டுக்காரரான சக்திவேல் இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் சக்திவேலை தம்பதியினர் திட்டியதாக தெரிகிறது.

இது குறித்து சக்திவேல் தான் கார் ஓட்டுனராக வேலை செய்யும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அணைக்கட்டு தொகுதி செயலாளர் கோட்டி என்கின்ற கோவேந்தனிடம் முறையிட்டுள்ளார்.

இதைதொடர்ந்து கோவேந்தன் துர்காவிடம் நியாயம் கேட்டு தகராறு செய்து அவரை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து துர்கா பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனை அடுத்து பாகாயம் காவல் துறையினர் கொலை மிரட்டல் விடுத்தல், பெண்ணை அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சக்திவேல் மற்றும் கோவேந்தனை கைது செய்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டு நேற்று (28.06.2023) இரவு வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஒன்று நீதிபதி வீட்டிற்று கொண்டுவரப்பட்டு ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஒன்று நீதிபதி சத்யகுமார் கைதான விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கோட்டி என்கிற கோவிந்தனை வரும் மூன்றாம் தேதி வரை (03.07.2023) நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதனை அடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கோட்டி என்கிற கோவிந்தனை காவல்துறையினர் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் நீதிபதிகள் குடியிருப்பு அமைந்துள்ள வேலூர் அண்ணா சாலையில் 100-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரின் கைதை கண்டித்து நீதிபதிகள் குடியிருப்பு முன் குவிந்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவரை சிறைக்கு அழைத்து செல்லும்போது மறியலில் ஈடுபடவும் முயற்சித்தனர். இதனால் நள்ளிரவில் அங்கு பெரும் பரபரப்பான சூழல் காணப்பட்டது. இதனைத் தடுக்கும் பொருட்டு வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையிலான 50 -க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

Views: - 339

0

1