உரத்தை வாங்கிட்டு பணம் கொடுக்காமல் மோசடி.. இயற்கை உரம் விற்பனையில் ரூ.82.65 லட்சம் அபேஸ் ; பஞ்சாப் வாலிபர் கைது!!

Author: Babu Lakshmanan
27 December 2022, 4:40 pm
Quick Share

கோவை ; இயற்கை உரம் விற்பனையில் ரூ.82.65 லட்சம் மோசடி செய்த பஞ்சாப்பை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை இருகூர் அருகே உள்ள ஏ.ஜி.புதூரில் நண்டுவில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் மையம் நடத்தி வருபவர் விக்ரம் சுதாகர். இவரது நண்பர் திருநாவுக்கரசு பஞ்சாபில் உள்ளார். அவரை பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த கரம்வீர் செர்கில், பங்கஜ் மித்தல் ஆகிய இரண்டு பேர் சந்தித்தனர். அவர்கள் இயற்கை உரம் வாங்கி பஞ்சாபில் விற்பனை செய்வதாக கூறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, திருநாவுக்கரசு இயற்கை உரம் தயாரிக்கும் விக்ரம் சுதாகர் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். பின்னர், பஞ்சாப் மாநிலத்தில் இயற்கை உரத்தை விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, ரூபாய் 82 லட்சத்து 65 ஆயிரம் மதிப்புள்ள உர மூட்டைகளை விக்ரம் சுதாகர் பஞ்சாப் மாநிலத்திற்கு அனுப்பி வைத்தார்.

உரம் மூட்டைகளைப் பெற்றுக் கொண்ட அவர்கள், உரத்திற்க்கான பணத்தை கொடுக்கவில்லை. நீண்ட நாட்கள் ஆகியும் பணத்தை கொடுக்காததால் கோவை மாநகர மத்திய குற்றப் பிரிவு போலீசில் விக்ரம் சுதாகர் புகார் செய்தார். அதன் பேரில், போலீசார் பஞ்சாப் மாநிலத்திற்கு சென்றனர். போலீசாரை பார்த்து கரம்வீர் செர்கில் தப்பி ஓடினார். பங்கஜ் மித்தல் பிடிபட்டார். அவரை கைது செய்து கோவை கொண்டு வந்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் பஞ்சாபில் உள்ள ஒரு குடோனில் உரை மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. அதனையும் போலீசார் முடக்கி வைத்தனர். இது தவிர தலைமறைவான கரம்வீர் செர்கிலை வலை வீசி தேடி வருகின்றனர்.

Views: - 415

0

0