சினிமா, டிவி தொடர்களில் நடிக்க வாய்ப்பளிப்பதாக கூறி பெண்களை அழைத்து கட்டாய பாலியல் தொழில் : அடுக்குமாடி குடியிருப்பில் காத்திருந்த அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
6 September 2022, 10:40 am
Youth Arrest - Updatenews360
Quick Share

இளம்பெண்களிடம் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து பாலியல் தொழில் நடத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம்பெண்களிடம் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகவும், தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகவும், ஆசை வார்த்தைகள் கூறி, அடுக்குமாடி குடியிருப்புகள், பங்களா வீடுகள் மற்றும் தனியார் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்து அவர்களை கட்டாயப்படுத்தி விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தி சிலர் பணம் சம்பாதிப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில், மேற்படி குற்றவாளிகளை கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், உத்தரவிட்டதின்பேரில், மத்திய குற்றப்பிரிவின், விபச்சார தடுப்புப்பிரிவு காவல் குழுவினர் மூலம் கண்காணித்து விபச்சார தரகர்களை கைது செய்து, அப்பாவி பெண்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையாளர் தலைமையில் விபச்சார தடுப்புப் பிரிவு உதவி ஆணையாளர், காவல் ஆய்வாளர் மற்றும் காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, அண்ணாநகர், 18வது மெயின் ரோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பை கண்காணித்தபோது, அங்கு பாலியல் தொழில் நடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது.

அதன்பேரில் மேற்படி இடத்தில் பாலியல் தொழில் நடத்திய புரோக்கர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சையது முகமது, வ/22, என்பவரை கைது செய்தனர்.

பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்திருந்த 4 பெண்கள் மீட்கப்பட்டனர். மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாகி உள்ள அன்பு மற்றும் சத்தியமூர்த்தி ஆகிய இருவரை காவல் குழுவினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

விசாரணைக்குபின்னர் கைது செய்யப்பட்ட சையது முகமது மற்றும் மீட்கப்பட்ட 4 பெண்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

Views: - 248

0

0