2 வருடமாக வரவேற்பாளராக நடித்து நோயாளிகள் கட்டணத்தில் ரூ.40 லட்சம் கையாடல் : தனியார் ஆஸ்பத்திரியில் நூதன கொள்ளை.. எஸ்கேப் ஆன லேடி!!

Author: Udayachandran RadhaKrishnan
6 September 2022, 10:25 am
One Care - Updatenews360
Quick Share

கோவையில் தனியார் மருத்துவமனையில் நோயாளிகள் செலுத்திய ரூ.40 லட்சம் கட்டணத்தை சுருட்டிக்கொண்டு தலைமறைவாகியுள்ள பெண் வரவேற்பாளர் லதாவைப் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கோவை சாய்பாபா காலணியில் இயங்கி வரும் பிரபலமான (“ஒன் கேர்”) என்கின்ற தனியார் மருத்துவமனையில் இந்த மோசடி நடந்துள்ளது. கோவிட் காலத்தில் இந்த மருத்துவமனையில் நோயாளிகள் நிரம்பி வழிந்தனர்.

மருத்துவமனையின் தலைமை மருத்துவர் நோயாளிகளின் ரிஜிஸ்டர் எண்ணிகையையும் வரவு செலவு கணக்கினையும் சோதித்து உள்ளார். அப்போது நோயாளிகள் செலுத்திய பணம் மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பல நோயாளிகளின் பெயர் கணினியில் பதிவேற்றம் செய்யும் நிலையில் அவர்கள் செலுத்திய மருத்துவ கட்டணம் கணக்கில் சேர்க்காமல் கையாடல் நடந்திருப்பது தெரியவந்தது.

அது தொடர்பாக பெண் வரவேற்பாளர் லதாவை அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது அவர் தனியாக வைத்திருந்த பணத்தை நிர்வாகத்திடம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2021 அக்டோபர் மாதம் வரை கோவிட் காலத்தில் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் பட்டியலை சோதித்தனர்.

அப்போது ரூ.40 லட்சம் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. இரண்டு வருட காலங்களில் பெண் வரவேற்பாளர் லதா இரவு பணியை கேட்டு வாங்கி வந்துள்ளார்.

அப்போது சிகிச்சைக்காக வருகின்ற நோயாளிகளின் பெயரை கணினியில் பதிவேற்றம் செய்துவிட்டு பின்னர் சிகிச்சை முடிந்த பின்பு நோயாளிகள் செலுத்தும் மருத்துவ கட்டணத்தை மருத்துவமனை கணக்கில் ஏற்றாமல் தனியாக மறைத்து வைத்துள்ளார்.

பணி முடிந்து வீட்டுக்கு செல்லும் போது அந்த பணத்தை எடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உள்நோயாளிகளாக மருத்துவமனையில் அனுமதி ஆனவர்களின் மருத்துவ கட்டணத்தை கையாடல் செய்தால் மாட்டிக்கொள்வோம் என்று கருதிய லதா ஒபி என்று சொல்லப்படும் புறநோயாளிகளின் மருத்துவக் கட்டணத்தை நூதன முறையில் கையாடல் செய்திருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சாய்பாபா காலணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் லதா மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் லதா தலைமறைவு ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் லதாவுக்கு துணைப்போன மருத்துவமனை ஊழியர்களிடமும் மோசடி குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் பணம் ரூ.40 லட்சம் பெண் வரவேற்பாளர் சுருட்டியது அறிந்த இதர தனியார் மருத்துவதுறையினர் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 419

0

0