16 வயது சிறுமியை கடத்தி திருமணம் : இளைஞர் உட்பட 2 பேர் கைது!!

Author: kavin kumar
10 February 2022, 6:39 pm
Quick Share

ஈரோடு : ஈரோடு அருகே 16 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த இளைஞர் மற்றும் அவரின் தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அடுத்த வெள்ளோடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவர், தன்னுடைய 16 வயது மகளை கடந்த 6-ந்தேதி முதல் காணவில்லை எனவும், 10ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் தனியாக இருந்ததாகவும், கடந்த 7ந் தேதி வெள்ளோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இது குறித்து வெள்ளோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று நாமக்கல் மாவட்டம், கொக்கராயன்பேட்டையை சேர்ந்த ரத்தினம் என்பவரின் மகன் எலக்ட்ரீசியான முருகேசன் (20) என்பவர் காணாமல்போன 16 வயது சிறுமியுடன் வெள்ளோடு காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

முருகேசனிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது முருகேசன், சிறுமியை கடந்த 8 மாதங்களாக காதலித்து வந்ததாகவும், கடந்த 6-ந் தேதி சிறுமியை அழைத்து கொண்டு மேட்டூரில் உள்ள தனது தந்தையிடம் ரத்தினத்திடம் சென்று, ரத்தினம் வழங்கிய அறிவுரையின்படி, மறுநாள் 7-ந் தேதி எடப்பாடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சிறுமியை அழைத்து சென்றார். பின்னர் அங்கு கிட்டாம்பட்டி என்ற ஊரில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்துகொண்டதாக முருகேசன் தெரிவித்துள்ளார். மேலும் முருகேசனிடமும், சிறுமியிடமும் காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தினர்.

இதில் சிறுமியை அவரது வீட்டுக்கு தெரியாமல் கடத்திச் சென்று திருமணம் செய்ததில் முருகேசனின் தந்தை ரத்தினத்துக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது.இதைத்தொடர்ந்து முருகேசன் மற்றும் அவரது தந்தை ரத்தினம் ஆகியோரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.மேலும் 16 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த இந்த வழக்கில் தொடர்புடைய முருகேசனின் அண்ணன் பூபதி தலைமறைவாகியுள்ளார்.

Views: - 485

0

0