‘உங்க பஸ்ஸும் வேணாம்.. ஒன்னும் வேணாம்’… முதல் நாளே லேட் ; அதிருப்தியில் கிராம மக்கள்.. பால் வண்டியில் தொங்கிச் சென்ற மாணவர்கள்!!

Author: Babu Lakshmanan
7 March 2024, 10:49 am

சுதந்திரம் பெற்றதில் இருந்து முதல்முறையாக கிராமத்திற்கு விடப்பட்ட அரசுப் பேருந்து, ஒரு மணி நேரம் தாமதமாக வந்ததால், அதிருப்தியடைந்த மாணவ, மாணவிகள், ஆபத்தான முறையில் பால் வண்டியில் தொங்கிச் சென்றுள்ளனர்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அதிகாரப்பட்டி பஞ்சாயத்திற்கு மாரியம்பட்டி கிராமத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தார்சாலை வசதி இருந்தும் சுதந்திரம் பெற்றதில் இருந்து நேற்று வரை இந்த பகுதிக்கு பேருந்து வசதி இல்லாமல், கிராம மக்கள், பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், மருந்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.

பல ஆண்டுகளாக இக்கிராமத்திற்கு பேருந்து சேவை தொடங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்திருந்தனார். இவர்கள் கோரிக்கைகள் தேர்தல் நேரங்களில் வாக்குறுதியாக மட்டும் ஏமாற்றப்பட்டு வந்தது. இந்த நிலையில், மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்திருந்த நிலையில்,
மாவட்ட நிர்வாகம் கோரிக்கையை ஏற்று, அரூரில் இருந்து அதிகாரப்பட்டி வழியாக பாப்பிரெட்டிப்பட்டி செல்லும் 12 ஏ என்னும் எண் கொண்ட அரசு பேருந்தை மாரியம்பட்டி கிராமம் வரை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டனர்.

இதனையடுத்து, நேற்று காலை 8:30 மணி அளவில் இக்கிராமத்திற்கு அரசு பேருந்து வரும் என எதிர்பார்த்து பள்ளி மாணவ, மாணவிகள் பேருந்துக்காக காத்திருந்த நிலையில், பேருந்து சுமார் 1 மணி நேரம் தாமதமாக வந்ததால், பள்ளி மாணவ, மாணவிகள் கடுப்பாகினர்.

மேலும், ‘உங்க பஸ்சும் வேணாம்.. பஸ்சுக்காக எவ்வளவு நேரம் காத்து கொண்டு இருக்கிறது,’ என எண்ணியபடி அவ்வழியாக வந்த தனியார் பால் வாகனத்தில் ஏறி ஆபத்தான வகையில் பயணம் செய்தவாறு பள்ளிக்கு சென்றனர்.

அதனை பிறகு வந்த அரசு பேருந்தை கண்டதும் அங்கிருந்த பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கூச்சலிட்டு கைதட்டி நடனமாடி ஆரவாரம் செய்து வரவேற்றனர். அதனை தொடர்ந்து, பொதுமக்கள் ஆரத்தி எடுத்து, மலர் தூவி, பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதனையடுத்து, பேருந்தை பாப்பிரெட்டிப்பட்டி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் மற்றும் மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் மெடிக்கல் சத்தியமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் கலந்துகொண்டு பேருந்து சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!