அரசு மருத்துவமனை மீது நம்பிக்கையே போயிடுச்சு… 8 மாசத்துக்கு அப்பறம் மறுபடியும் ஒரு சம்பவம்.. அண்ணாமலை கண்டனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 July 2023, 3:57 pm
Annamala - Updatenews360
Quick Share

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகீர் – அஜிஸா தம்பதியின் ஒன்றரை வயது மகன் முகமதுமகிர். தலையில் நீர் கோர்த்தல் பிரச்சினை காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தையை சேர்த்தனர். அங்கு குழந்தையின் வலது கையில் ‘ட்ரிப்ஸ்’ போடப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு ட்ரீப்ஸ் போடப்பட்ட வலது கை கறுப்பாக மாறியதுடன், அழுகத் தொடங்கியது. இதையடுத்து, குழந்தையின் கையை அகற்ற வேண்டுமெனத் தெரிவித்த மருத்துவர்கள், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்குக் குழந்தையை அனுப்பிவைத்தனர்.

அங்கு 2 மணி நேர அறுவைசிகிச்சைக்குப் பின்னர், குழந்தையின் வலது கை மூட்டுப் பகுதிக்கு மேல் வரை அகற்றப்பட்டது. இந்நிலையில், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளித்தபோது, அலட்சியமாக செயல்பட்டதே கை பறிபோனதற்குக் காரணமென்று பெற்றோர் குற்றம்சாட்டினர்.

இந்த சம்பவம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு, வலது கை முட்டு வரை பாதிக்கப்பட்டு, வலது கையை வெட்டி அகற்றியிருக்கின்றனர்.

குழந்தைக்குக் கொடுத்த தவறான சிகிச்சையே இதற்குக் காரணம் என பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் கொடுத்துள்ள விளக்கம் ஏற்கும்படியாக இல்லை.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், 17 வயதே ஆன கால்பந்து வீராங்கனை பிரியா, அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட தவறான சிகிச்சையால் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

வசதி வாய்ப்புகள் இல்லாத ஏழை எளிய மக்களின் ஆரோக்கியத்திற்கு ஒரே நம்பிக்கையாக விளங்கும் அரசு மருத்துவமனைகள், தொடர்ந்து இது போன்று சர்ச்சைகளில் சிக்குவது ஏற்புடையதல்ல.

அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து இது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடப்பது, எதேச்சையானதா அல்லது பொதுமக்களிடையே அரசு மருத்துவமனைகள் குறித்து நம்பிக்கையின்மையை விதைப்பதற்கா என்ற சந்தேகம் எழுகிறது.

உடனடியாக, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தி, பொதுமக்களுக்குத் தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், தரமற்ற சிகிச்சை வழங்கியிருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

Views: - 196

0

0