எல்லாரும் சமம் என கூறிய வைகுண்டர் சனாதனவாதியா? 18 மொழிகளை கற்ற கால்டுவெல் படிக்காதவரா? ஆளுநருக்கு அப்பாவு கண்டனம்!

Author: Udayachandran RadhaKrishnan
5 March 2024, 9:41 pm
appavu
Quick Share

எல்லாரும் சமம் என கூறிய வைகுண்டர் சனாதனவாதியா? 18 மொழிகளை கற்ற கால்டுவெல் படிக்காதவரா? ஆளுநருக்கு அப்பாவு கண்டனம்!

திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, 1833-ம் ஆண்டு அய்யா வைகுண்டர் அவதரித்தார். அந்த காலகட்டத்தில் அவரது சமூகத்தில் பிறந்தவர்கள் இந்து ஆலயம் அமைந்துள்ள தெருவில் செல்ல முடியாது.

கோயிலுக்குள் நுழைய முடியாது. பெண்கள் மார்பில் துணி அணியக் கூடாது. ஆண்கள் தலைப்பாகை கட்டக் கூடாது என்ற நெருக்கடியான காலத்தில் அவர் பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் முடிசூடும் பெருமாள்.

அப்போது சனாதன தர்மம் உச்சத்தில் இருந்தது. திருவாங்கூர் மகராஜா, அய்யா வைகுண்டரின் பெயரை முத்துக்குட்டி என்று மாற்றினார். சனாதன ஆதிக்க சக்திகளுக்கு எதிராக அய்யா வைகுண்டர், கடவுள் அவதாரமாக வந்து மக்கள் அனைவரும் சமம் என சொல்லி புது வழிமுறையை கொண்டுவந்தார்.

சமத்துவம், சமதர்மம், சாதி, மதம், இனத்துக்கு அப்பாற்பட்டு மனித இனம் ஒன்று என்ற உயர்ந்த குறிக்கோளை கொண்டு வந்தார். அவருக்கு சனாதான வாதிகளால்தான் துன்பம் வந்தது. அதனை எதிர்த்துப் போராடி சமதர்மத்தை நிலைநாட்டியவர். அவரை சனாதனவாதி என்று சொன்னால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இதுபோல் கால்டுவெல் வட அயர்லாந்தில் பிறந்து லண்டனில் படித்து இந்தியாவிற்கு வந்தார். இந்தியாவில் 18 ஆண்டு காலம் படித்தார். 18 மொழிகளை கற்றுத் தேர்ந்தார். அந்த காலகட்டத்தில் தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகள் சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியது என்ற தோற்றத்தை உருவாக்கி இருந்தார்கள்.

அதனை மாற்றி திராவிடத்துக்கும், சமஸ்கிருதத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை, திராவிட மொழி தனி மொழி, உலகில் தோன்றிய மூன்று மொழிகளில் தமிழ் மொழி முதலில் தோன்றியது என்பதை ஆய்வு செய்து, தமிழில் இருந்துதான் பிற மொழிகள் தோன்றின என்பதை நிரூபித்தார். சொல்வதை கேட்க வேண்டும், இல்லை என்றால் சொந்தமாக தெரிய வேண்டும். இரண்டும் இல்லாமல் ஆளுநர் தவறுதலாக பேசுகிறார்” என்று அப்பாவு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அய்யா வைகுண்டர் குறித்த கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு, சாமிதோப்பு தலைமை பதி அடிகளார் பாலபிரஜாபதி கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 65

0

0