மருத்துவமனையில் நகைக்கடை உரிமையாளர் அனுமதி : கடையில் பணியாற்றி இளம்பெண் செய்த வேலை… கையும் களவுமாக தாயுடன் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
1 March 2022, 5:20 pm
Nellai Jewel Theft -Updatenews360
Quick Share

நெல்லை : வள்ளியூர் பிரபல நகைக்கடையில் 47 பவுன் நகையை திருடிய இளம்பெண் மற்றும் அவரது தாயார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வள்ளியூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பழைய பேருந்து நிலையம் அருகில் பிரபல நகைக்கடையான திருமலை ஜீவல்லரி செயல்பட்டு வருகிறது. இதனை வள்ளியூர் யாதவர் தெருவைச் சேர்ந்த ராமசந்திரன் என்பவர் நடத்தி வருகிறார்.

இங்கு பணகுடி, கலந்தபனை அருகே உள்ள இராஜலிங்கபுரத்தைச் சேர்ந்த லெட்சுமணன் – விஜயலெட்சுமி தம்பதியின் மகள் சுபா (வயது 22) என்ற இளம்பெண் விற்பனை பிரதிநிதியாக கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஜீவல்லரியின் உரிமையாளர் ராமச்சந்திரனுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதனால் நகை கடைக்கு சரிவர வரமுடியவில்லை. இந்நிலையில் உடல்நிலை சரியானதால் கடந்த 15ம் தேதி கடைக்கு சென்று நகைகளை ஆய்வு செய்தபோது 47 சவரன் நகைகள் மாயமானது தெரிய வந்தது.

உடனே கடையில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை பார்த்தபோது அதில் விற்பனை பிரதிநிதியான சுபா நகைகளை திருடி தனது தாயார் விஜயலெட்சுமியிடம் கொடுத்தது தெரிய வந்தது.

இதனையடுத்து இது குறித்து ராமசந்திரன் வள்ளியூர் காவல் உதவி கண்காணிப்பாளர் சமய் சிங் மீனாவிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் ஏஎஸ்.பி. உத்தரவின் பேரில் வள்ளியூர் காவல் ஆய்வாளர் சாகுல் ஹமீது வழக்குபதிவு செய்து விசாரணை தீவிர விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில் கடந்த 4 நாட்களாக நகைகடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி மானிட்டர் பழுதாகி இருந்ததால் பழுது நீக்குவதற்காக மானிட்டரை சர்வீஸ் சென்டருக்கு அனுப்பியுள்ளனர். மானிட்டர் இல்லாததால் சிசிடிவியில் பதிவாகாது என்று நினைத்துக்கொண்டு அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இளம்பெண் சுபா நகைகளை திருடியது தெரிய வந்தது. இதனையடுத்து வள்ளியூர் போலீசார் சுபாவையும் அவரது தாயார் விஜயலெட்சுமியையும் கைது செய்தனர்.

Views: - 691

0

0