ஒன்றிய அரசு அல்ல.. ஒன்றாத அரசு : அதனால்தான் திருமாவுடன் தோள் உரசி நிற்கிறேன்.. பரப்புரையில் #KamalHaasan பேச்சு!

Author: Udayachandran RadhaKrishnan
3 April 2024, 10:04 pm

ஒன்றிய அரசு அல்ல.. ஒன்றாத அரசு : அதனால்தான் திருமாவுடன் தோள் உரசி நிற்கிறேன்.. பரப்புரையில் #KamalHaasan பேச்சு!

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, மேலவீதி பகுதியில் கமல்ஹாசன் பேசியதாவது, சாதியம் தான் என் எதிரி. என் வாழ்க்கையில் சாதிக்கு இடமில்லை. என் சினிமாக்களிலும் அப்படிதான். பிறகு, சினிமாவிற்கு ஏன் ஜாதி பெயர் வைக்கிறீர்கள் என்று கேட்கலாம்.

குடியின் கொடுமையைப் பற்றி நான் ஒரு குறும்படம் எடுக்க நேர்ந்தால், அதன் மையப் பாத்திரம் யாராக இருப்பான் ? ஒரு குடிகாரனாகத் தான் இருப்பான். அவன் இல்லாமல் அந்த கருத்தை சொல்ல முடியாது.

அதுபோல், சாதி வெறியனை மையப்படுத்தி தான், படத்தின் நிறைவு கருத்தை சொல்ல முடியும். அவன் பாழான கதையையும், பண்பட்ட கதையையும் கூறுவதால் அது சாதியை உயர்த்திப்பிடிப்பது ஆகாது. விமர்சிப்பதாகும். இது பதில் அல்ல. விளக்கம்.

ஆனால், சாதியே இல்லை என்கிறீர்கள். சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்கிறீர்களே என்று கேட்கலாம். இன்னும் எத்தனை பேர் அடிகோட்டு விளிம்பில் இருக்கிறார்கள் என்று எங்களுக்கு தெரிய வேண்டும்.

ஏனென்றால், இங்கு அமெரிக்கா மாதிரி வெள்ளை, கருப்பு என்கிற பிரிவு கிடையாது. மாநிறத்தில் இருப்பவனும் விளங்கு போட்டு இருப்பான். கருப்பாக இருப்பவனும் விளங்கு போட்டு இருப்பான். அவனை எல்லாம் விடுவிக்க வேண்டும்.

தமிழ்நாடு மீனவர்களை காக்க தவறிய அரசு இந்த ஒன்றிய அரசு. 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் எப்போதும் இல்லாத அளவில் நம் மீனவர்கள் கைதாவதும், சிறையில் அடைக்கப்படுவதும் இன்று அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

ஒன்றிய அரசு என்று சொன்னால் இவர்களுக்கு கோபம் வருகிறது. இவர்கள் ஒன்றிய அரசு கிடையாது. மக்களோடு ஒன்றாத அரசு. இதனால் தான் திருமாவளவனோடு தோள் உரசி களம் காண்கிறேன்.

தமிழ்நாட்டின் குரலாக ஸ்டாலின் திகழ்கிறார்.. இளைஞர்களின் குரலாக தம்பி உதயநிதி திகழ்கிறார்.. குரலற்றவர்களின் குரலாக பெருஞ்சிறுத்தை திருமாவளவன் இருக்கிறார் என கூறினார்.

  • Bigg Boss Tamil Season 8 updates பிக் பாஸ் வீட்டுக்கு படையெடுத்த பிரபல நடிகர்…உற்சாக வரவேற்பு கொடுத்து அசத்தல்..!
  • Views: - 244

    0

    0