டாஸ்மாக் சூப்பர்வைசரை அரிவாளால் வெட்டி ரூ.6 லட்சம் கொள்ளை முயற்சி.. போலீசாருக்கு தண்ணி காட்டிய பிரபல வழிப்பறி கொள்ளையன்..!!

Author: Babu Lakshmanan
26 July 2023, 1:27 pm
Quick Share

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் டாஸ்மாக் சூப்பர்வைசரை அரிவாளால் வெட்டி ஆறரை லட்சம் ரொக்க பணத்தை பறிக்க முயன்ற பிரபல வழிப்பறி கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே இரும்பிலி பொட்டல்கரையை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (53). இவர் குளச்சல் பயணியர் விடுதி சந்திப்பு அரசு டாஸ்மாக் கடையில் கடந்த 15 வருடமாக சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இரவு கடையில் வசூலாகும் பணத்தை வீட்டிற்கு கொண்டு சென்று மறுநாள் காலையில் வங்கியில் கட்டுவது வழக்கம்.

கடந்த 8ம் தேதி சனிக்கிழமை இரவு வழக்கம்போல் டாஸ்மாக் கடையை பூட்டிவிட்டு பணத்தை எடுத்துக்கொண்டு சக ஊழியர் ஒருவர் பைக்கில் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டருகே பாதையில் நடந்து செல்லும்போது, அங்கு இருளில் மங்கி குல்லா அணிந்து பதுங்கியிருந்த மர்ம நபர் ஒருவர், திடீரென கோபாலகிருஷ்ணன் மீது பாய்ந்து டாஸ்மாக் வசூல் பணம் ஆறரை லட்ச ரூபாயை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் அரிவாளால் வெட்டி பணத்தை பறிக்க முயற்சித்தார்.

உடனே உஷாரான கோபாலகிருஷ்ணன் பணப்பையை இறுக பற்றிக்கொண்டு மர்ம நபருடன் போராடினார். மறுகணம் அவர் சத்தமிடவே மர்ம நபர் தப்பியோடி விட்டார். இந்த சம்பவத்தில் கோபாலகிருஷ்ணனுக்கு வலது கையில் இரண்டு விரல் துண்டானது. மற்றும் இடது முழங்கை, தலை ஆகிய பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையறிந்த அப்பகுதியினர் அவரை மீட்டு நாகர்கோவிலில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பணம் பறிக்க நடந்த முயற்சியில் மர்ம நபருடன் கோபாலகிருஷ்ணன் போராடியதால் டாஸ்மாக் வசூல் பணம் ரூ.6.55 லட்சம் தப்பியது

இந்த நிலையில் புகாரின் அடிப்படையில் குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், மர்ம நபரை பிடிக்க டிஎஸ்பி தங்கராமன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, அதன் அடிப்படையில் விசாரணை நடத்தியதில், மங்கி குல்லா அணிந்து வந்த அந்த மர்ம நப,ர் மேற்கு நெய்யூர் பகுதியை சேர்ந்த 30 வயதான பிரபல வழிப்பறி கொள்ளையன் அருண் ஷாஜூ என்பது தெரியவந்தது.

தொடர்ந்து, கடந்த 15 நாட்களாக அவரது செல்போன் எண் சிக்னலை வைத்து தனிப்படை போலீசார் பின் தொடர்ந்த நிலையில், போலீசாரையே போக்கு காட்டிய அவர், கடைசியாக திங்கள்கிழமை தஞ்சாவூரில் தஞ்சமடைந்த நிலையில், தனிப்படை போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து, செவ்வாய்கிழமை குளச்சல் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அதில், அருண் ஷாஜூவுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கொலை, கொள்ளை உள்ளிட்ட 15 வழக்குகள் நிலுவையில் இருப்பதும், சமீபத்தில் ஆரல்வாய்மொழி பகுதியில் ஒரு டெம்போவை கடத்தி சென்ற வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக தலைமறைவாக இருந்துள்ளார்.

இந்த சூழலில், குளச்சல் டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக வேலை பார்க்கும் கோபால கிருஷ்ணன், இரவு டாஸ்மாக் வசூல் பணத்தை எடுத்து செல்வதை ஒரு வாரமாக வேவு பார்த்து, சம்பவத்திற்கு முந்தைய நாள் பறிக்க திட்டமிட்டதாகவும், அன்று உடன் சக ஊழியர் அவருடன் வீடு வரை வந்ததால் முடியாமல் போனதும தெரிய வந்தது. எனவே, அடுத்த நாள் சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் அரிவாளுடன் மங்கி குல்லா அணிந்து வந்து, இருட்டான வழிப்பாதையில் பதுங்கி இருந்து கோபாலகிருஷ்ணம் பணத்துடன் வரும் போது, அவரை சரமாரியாக வெட்டி பணத்தை பறிக்க முயன்றதாக கூறியுள்ளார்.

ஆனால், அவர் பண பையை கட்டிப்பிடித்து உருண்டு போராடி சத்தம் போட்டதால் அக்கம்பக்கத்தினர் அங்கு வருவதை கண்டு தப்பியோடியதாகவும் வாக்குமூலம் அளித்தார்.

இதனையடுத்து, கோபாலகிருஷ்ணனை வெட்ட பயன்படுத்திய அரிவாள், மங்கி குல்லா, இருசக்கர வாகனம் மற்றும் அவரது செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Views: - 199

0

0