தென்காசி சார் பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு… முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் ; நாகர்கோவிலில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
7 November 2023, 12:48 pm
Quick Share

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள சார்பதிவாளர் தாணு மூர்த்தியின் வீடு மற்றும் உறவினர் வீடுகளில் செங்கல்பட்டு மற்றும் நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சைமன் நகர் பகுதியை சேர்ந்தவர் தாணுமூர்த்தி சார் பதிவாளராக தற்போது தென்காசி மாவட்டத்தில் பணிபுரிந்து வருகிறார். 2018 – 2020 வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது கூடுவாஞ்சேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தபோது, 15-12-2020 அன்று செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தி ரூபாய் 11,55,400/- பறிமுதல் செய்தனர்.

மேலும், அன்றைய தினம் அவருடைய வீட்டில் சோதனை செய்தபோது 114 பவுன் தங்க நகையும் சிக்கியது. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றத்திற்காக அவர் மீது நேற்று மாலை வழக்கு பதிவு செய்தனர். அவர் தற்போது தென்காசி மாவட்டத்தில் ஊத்து மலை சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில், அவருடைய சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள சைமன் நகரில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்ததால் அவருடைய வீட்டிலும், திங்கள் நகர் பகுதியில் உள்ள அவருடைய மைத்துனர் ஸ்ரீ முருகா ஜுவல்லரி உரிமையாளர் சரவணன் வீட்டிலும் சோதனை நடத்த, குமரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் அவர்களுக்கு கிடைத்த தகவல்படி அவருடைய உத்தரவின் பேரில், இன்று குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு ஆய்வாளர் தலைமையில் நாகர்கோவில் சைமன் நகர் வீட்டில் சோதனை நடந்து வருகிறது.

மேலும் லஞ்ச ஒழிப்பு பிரிவின் மற்றொரு காவல் ஆய்வாளர் தலைமையில் திங்கள் நகர் பகுதியில் உள்ள தாணுமூர்த்தி மனைவியின் சகோதரர் ஸ்ரீ முருகா ஜுவல்லரி உரிமையாளர் சரவணன் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.

இந்த சோதனை முடிவில் தான் எவ்வளவு ஆவணங்கள் கைப்பற்றப்படுகிறது என்பதும், வருமானத்துக்கு அதிகமாக பினாமி பெயரில் சேர்க்கப்பட்டுள்ள சொத்துக்கள் எவ்வளவு என்பது குறித்து தெரியவரும் என்று கூறப்படுகிறது. தற்போது நடைபெற்று வரும் சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 1095

0

0