திருப்பம் கொடுத்த டெல்லி பசுமை தீர்ப்பாயம்.. இனி வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி?!
Author: Udayachandran RadhaKrishnan29 April 2024, 12:14 pm
திருப்பம் கொடுத்த டெல்லி பசுமை தீர்ப்பாயம்.. இனிவெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி?!
கோவை மாநகராட்சிக்கு சொந்தமாக வெள்ளலுாரில், 650 ஏக்கர் பரப்பளவில் கழிவுநீர் பண்ணை உள்ளது. இதில், 150 ஏக்கரில் கழிவு கொட்டப்பட்டு திடக்கழிவு மேலாண்மை செய்யப்படுகிறது.
மாநகராட்சி பகுதிகளில் சேகரமாகும், 1,250 டன் வரையிலான குப்பை இங்கு பல ஆண்டுகளாக குவிக்கப்பட்டதால், மலை போல் தேங்கியுள்ளது.
இதனால் துர்நாற்றம், ஈ தொல்லை போன்ற சுகாதார சீர்கேடு பிரச்னைகளை, சுற்றுப்பகுதி மக்கள் சந்திக்கின்றனர். இப்பிரச்னை, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் வரை சென்று விசாரணையும் நடந்துவருகிறது.
இந்நிலையில், கடந்த 6ம் தேதி குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள், 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், மாநகராட்சி பணியாளர்கள், 10 நாட்களுக்கும் மேலாக இரவு, பகலாக போராடி தீயை அணைத்தனர். புகை மூட்டத்தால் சுற்றுப்பகுதியில், காற்று மாசடைந்தது.
அப்போது, பத்திரிகைகளில் வெளியான செய்தியை அடிப்படையாக கொண்டு, டில்லி தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து, வழக்கு பதிவு செய்தது. தொடர்ந்து, தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்துக்கு வழக்கை மாற்றி அமைத்துள்ளது.
இதில், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர், கோவை மாநகராட்சி கமிஷனர், மாவட்ட கலெக்டர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதில், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய, நான்கு வாரம் அவகாசம் கோரியுள்ளனர்.
இவர்கள் நான்கு பேரிடம் இருந்தும் மே 28ம் தேதி சென்னை, தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
வெள்ளலுார் குப்பை கிடங்கால் துர்நாற்றம், சுற்றுப்பகுதிகளில் வசிக்கமுடியாத சூழல் ஆகிய பிரச்னைகளை முன்வைத்து, குறிச்சி-வெள்ளலுார் மாசு தடுப்பு கூட்டுக்குழு செயலாளர் மோகன், தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இதுதொடர்பான விசாரணையும், மே 28ம் தேதி நடப்பது குறிப்பிடத்தக்கது.