காஞ்சிபுரம் பிரபல ரவுடி தியாகு டெல்லியில் கைது : விமானம் மூலம் சென்னை அழைத்து வந்த தனிப்படை…

Author: kavin kumar
21 January 2022, 5:12 pm
Quick Share

காஞ்சிபுரம் : பல நாட்கள் தலைமறைவாக இருந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி தியாகு என்பவனை டெல்லியில் இருந்து பின்தொடர்ந்து சென்ற ஏடிஎஸ்பி வெள்ளத்துரை தலைமையில் தனிப்படையினர் மடக்கி பிடித்து கைது செய்து உள்நாட்டு விமானம் மூலம் சென்னை கொண்டு வந்தனர்.

கம்போடியா நாட்டில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்ட காஞ்சிபுரத்தின் தாதா என வர்ணிக்கப்படும் ஸ்ரீதர் மறைவுக்குப் பின்னர் ஸ்ரீதரிடம் ஓட்டுனராக வேலை செய்த தினேஷ் ஒரு குழுவாகவும் ஸ்ரீதரின் மைத்துனர் தணிகா ஒரு குழுவாகவும் காஞ்சிபுரத்தை கதிகலங்கி வைத்து வந்தனர். இவர்கள் செய்யும் அட்டகாசத்தால் காஞ்சிபுரம் நகர மக்கள் அச்சத்துடனே வாழ்ந்து வந்தார்கள்.இவர்கள் இருவருக்குள்ளும் யார் பெரிய தாதா என்கின்ற போட்டியில் மாற்றி மாற்றி ஆட்களை கொலை செய்வதும் ,ஆட்களை கடத்துவதும் ,வியாபாரிகளை மிரட்டி பணம் சம்பாதிப்பதும் போன்ற செயல்களை செய்து காஞ்சிபுரம் நகரை எப்போதும் பதட்டத்தில் வைத்து இருந்தார்கள். தணிகா கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ளார்.

தினேஷ் மற்றும் பொய்யா குளம் தியாகு இருவரும் குண்டர் சட்டத்தை உடைத்துக்கொண்டு அவ்வப்போது சிறையிலிருந்து வெளியே வந்துவிடுவார்கள். ஒரு மாதம் முன்பு தினேஷ் மற்றும் தியாகுவின் உத்தரவுபடி, தினேஷின் ஆதரவாளர்கள் 5 பேர் ஒரு குழுவாக சென்று ஒரே நாளில் ஏழு வெவ்வேறு இடங்களில் ஏழு நபர்களை பட்டாக்கத்தியால் தாக்கி காட்டன் சூதாட்டம் செய்துகொண்டிருந்த நபர்களிடமிருந்து சுமார் 5 லட்ச ரூபாய் பணத்தை மிரட்டி பெற்றுள்ளனர். இந்த சம்பவம் காஞ்சிபும் நகரையே அச்சப்பட வைத்தது. இதேபோல் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அனைத்து தொழிற்சாலைகளையும் மிரட்டி தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள பிரபல ஏ பிளஸ் நிலை ரவுடி படப்பை குணா, அந்தந்தப் பகுதியில் பிரபலமாக உள்ள வைரவன், லெனின், நெடுங்குன்றம் சூரியா, போன்ற பிரபல ரவுடிகளால் அப்பகுதியில் இயங்கி வரும் ஐநூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மத்தியில் எப்போதும் அச்சம் நிலவி கொண்டே வருகிறது.

இப்படிப்பட்ட பிரபல ரவுடிகளை பிடிப்பதற்காக என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டான ஏடிஎஸ்பி வெள்ளத்துரை அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்திற்க்கு அயல் பணியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏடிஎஸ்பி வெள்ளதுரையின் வருகையைத் தொடர்ந்து அனைத்து ரவுடிகளும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்ற நோக்கத்தில் எல்லோரும் தலைமறைவாயினர். மறைந்த பிரபல தாதா ஸ்ரீதரின் வலது கரமான பிரபல ரவுடி தினேஷின் நெருங்கிய கூட்டாளியான தியாகு டெல்லியில் பதுங்கி உள்ளதாக வந்த ரகசிய தகவலையடுத்து ஏடிஎஸ்பி. வெள்ளைத்துரை தலைமையில் தனிப்படையினர் டெல்லி விரைந்தனர். நியூ டெல்லியில் மதராஸ் காலனி பகுதியில் ஆறுமுகம் என்பவர் வீட்டில் பதுங்கியிருந்த தியாகுவை பிடிக்க திட்டமிட்டிருந்த போது தியாகு தப்பித்து ராஜ்குமார் என்பவனின் காரில் அரியானா மாநிலம் நோக்கி விரைந்து சென்றான்.

டெல்லியில் இருந்து இவர்களை பின் தொடர்ந்து சென்ற ஏடிஎஸ்பி வெள்ளத்துரை தலைமையிலான தனிப்படையினர் டெல்லி – அரியானா இடையில் உள்ள பார்டர் கொடுஹா என்ற பகுதியில் உள்ள மெக்கானிக் கடையில் வைத்து தியாகுவை துப்பாக்கி முனையில் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். தியாகுவை டெல்லியிலிருந்து விமானம் மூலம் மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்திற்கு கொண்டு வரப்பட்டு பின்னர் அங்கிருந்து காஞ்சிபுரம் அழைத்துவரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தியாகு தப்பிக்க துணை செய்த கார் ஓட்டுனர் ராஜ்குமார் என்பவரை யும், தியாகு தங்குவதற்கு இடமளித்த மதராஸ் காலனி பகுதியில் உள்ள ஆறுமுகம் என்பவரையும் தனிப்படை உதவி காவல் ஆய்வாளர்கள் சிவக்குமார், முரளி, உள்ளிட்டவர்கள் கைது செய்து ரயில் மூலம் காஞ்சிபுரம் அழைத்து வந்தனர்.

Views: - 2809

0

0