மதுரையில் விட்டதை கோவையில் தட்டித்தூக்கிய காளை: பெருமையுடன் பரிசை பெற்ற வீரத்தமிழச்சி…!!

Author: Rajesh
21 January 2022, 5:27 pm
Quick Share

கோவை: கோவையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் யோக தர்ஷினி என்ற மாணவியின் காளை வெற்றி பெற்றதை அடுத்து அவர் பரிசை மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றார்.

கோவை செட்டிபாளையம் பைபாஸ் சாலையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 700 காளைகளும் 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை ஐராவதநல்லூரைச் சேர்ந்த வீரத்தமிழச்சி என்று டிரெண்ட் ஆன யோகதர்ஷினி என்ற மாணவியும் கலந்து கொண்டார்.

முன்னதாக அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாணவி யோகதர்ஷினி தனது காளையை களமிறக்கினார். இந்த போட்டியில் யோகதர்ஷினியின் காலை பிடி மாடு ஆனது. இதனால் அவருக்கு பரிசு கிடைக்காத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் அவருக்கு ஆறுதல் பரிசு வழங்க அமைச்சர் மூர்த்தி மைக்கில் யோகதர்ஷினியை அழைத்தார். ஆனால் தனக்கு ஆறுதல் பரிசு தேவையில்லை எனது மாடு எப்போது வெற்றி பெறுகிறதோ அப்போது பரிசை பெற்றுக் கொள்கிறேன் எனக்கூறிவிட்டு யோகதர்ஷினி நடையை கட்டினார். இது சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி ‘ வீரத்தமிழச்சி’ என்று பலராலும் அழைக்கப்பட்டார் யோகதர்ஷினி.

இந்நிலையில் இவர் தனது காளையுடன் இன்று கோவையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்டார். மேலும் இந்த போட்டியில் அவரது காளை வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து யோகதர்ஷினிக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தங்க நாணயம், தண்ணீர் அண்டா , ஹாட் பாக்ஸ் உள்ளிட்ட பரிசு பொருட்களை வழங்கினார்.

இதுகுறித்து யோகதர்ஷினி கூறுகையில், ” நான்கு வருடங்களாக ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டிருக்கிறேன். கோவைக்கு முதன்முறையாக வந்து ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டுள்ளேன். அவனியாபுரத்தில் எனது மாடு பிடி மாடு ஆனதால் நான் பரிசு பெறவில்லை. தற்போது எனது காளை வெற்றி பெற்றுள்ளது. அமைச்சர் கையால் பரிசுகளை பெற்றுள்ளேன். மகிழ்ச்சியாக உள்ளது.” என பெருமை பொங்க தெரிவித்துள்ளார்.

Views: - 938

1

0