கருப்பை கட்டியை கர்ப்பம் எனக் கூறி 5 மாதம் சிகிச்சை… வளைகாப்பு நடத்திய அரசு மருத்துவர்கள்.. ஆபத்தான கட்டத்தில் இளம்பெண் ; குமரியில் அலட்சியம்!!

Author: Babu Lakshmanan
12 December 2022, 9:09 pm
Quick Share

கன்னியாகுமரி ; கருப்பை கட்டியுடன் சென்ற இளம் பெண்ணை முறையாக பரிசோதிக்காமல் 5 மாதம் கர்ப்ப கால சிகிச்சை அளித்து, வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திய சம்பவம் கன்னியாகுமரியில் அரங்கேறியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மிடாலக்காடு பகுதியை சேர்ந்தவர் பிரதீஷ்குமார். ஹோட்டல் சமையல் தொழிலாளியான இவருக்கும் 23 வயதான அனிஷா என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதியருக்கு தற்போது ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் உடல் நலம் குன்றிய நிலையில் இருந்த அனிஷா, சிகிச்சைக்காக கீழ்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு அனிஷாவை பரிசோதித்த மருத்துவர்கள், தாங்கள் கர்ப்பமடைந்து தற்போது 3 மாத கர்பிணியாக உள்ளதாக கூறி, கர்ப்பகால சிகிச்சையையும் தொடங்கியுள்ளனர்.

மாதம் மாதம் கீழ்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் அனிஷாவை மருத்துவர்கள் பரிசோதித்து குழந்தையின் நாடி துடிப்பு நன்றாக இருப்பதாக கூறி, ஊட்டச்சத்து மாத்திரைகள், தடுப்பூசி என மருத்துவத்தை தொடர்ந்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி கீழ்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து அனிஷாவிற்கு அரசு சார்பில் நடத்தப்படும் வளைகாப்பு நிகழ்ச்சியையும் நடத்தியுள்ளனர். தொடர்ந்து 5 மாத காலமாக கர்ப்ப கால சிகிச்சை பெற்று வந்த அனிஷா, கடந்த 8ம் தேதி வியாழக்கிழமை அன்று வயிற்று வலியால் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அவரை பரிசோதித்த மருத்துவர் குழந்தையின் நாடி துடிப்பு குறைவாக இருப்பதாக கூறி மருத்துவமனையில் அனுமதித்து, குளுக்கோஸ் செலுத்தியதாக தெரிகிறது. பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வெட்டுமணி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு அனிஷாவை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றில் வளர்வது குழந்தை அல்ல, பெரிய அளவிலான கருப்பை கட்டி என அதிர்ச்சி தகவலை வெளியிட்டதோடு, தனியார் ஸ்கேன் மையத்திற்கு அனுப்பி, ஸ்கோன் எடுத்து சோதனை செய்து பார்த்தனர். அப்போது அது கருப்பை கட்டி என உறுதியான நிலையில், மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரைத்துள்ளனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த பிரதீஷ்குமார்-அனிஷா தம்பதியர், திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்ற நிலையில், அங்கு அனிஷாவை பரிசோதித்த மருத்துவர்கள், கருப்பையில் வளர்ந்துள்ள கட்டி புற்று நோய் போன்றது என்றும், தீவிரமாக வளர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளது என்று கூறியுள்ளனர். மேலும், ஆரம்ப காலத்தில் உரிய சிகிச்சை அளித்திருந்தால் சுலபமாக அகற்றி விடலாம் என்றும், தற்போது சிகிச்சை பெற 3 முதல் 5 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என கூறியுள்ளனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த அனுஷா, ஏழ்மையில் வாழும் தங்களிடம் சிகிச்சைக்கான இவ்வளவு பெரிய தொகை பணம் இல்லை என்றும், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் முறையாக பரிசோதிக்காமல், அலட்சியமாக கர்ப்பகால சிகிச்சை அளித்த மருத்துவர் கடைசி நேரத்தில் கூட முறையாக பரிசோதிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

தான் தற்போது மருத்துவரின் அலட்சியத்தால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக குற்றம்சாட்டியதோடு, அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை துணை இயக்குனரிடம் பரபரப்பு புகாரளித்துள்ளார். மேலும், ஏழையான எனக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அரசு முன் வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக கீழ்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஆனி ஜெஸ்டின் மேரி ஐ தொடர்பு கொண்டு விளக்கம் கேட்ட போது பதிலளிக்க மறுத்த நிலையில், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் மீனாட்சி ஐ தொடர்பு கொண்டு கேட்கப்பட்டது.

அதற்கு அவர் அளித்த பதிலாவது ;- இளம்பெண்ணுக்கு கருப்பை கட்டிக்கு சிகிச்சை அளிக்காமல் கர்ப்பகால மருத்துவம் செய்தது, தங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. தொடர்ந்து, சிகிச்சை குறித்து மருத்துவர் மற்றும் இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகிறோம். மருத்துவரின் அலட்சியம் என தெரியவந்தால் மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது அந்த இளம் பெண்ணுக்கு ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மூலம் உயர்தர சிகிச்சை வழங்க ஏற்பாடுகள் செய்ய பரிந்துரைத்துள்ளோம், என விளக்கமளித்தார்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கருப்பை கட்டியுடன் சென்ற இளம் பெண்ணுக்கு மருத்துவர் கர்ப்பக்கால சிகிச்சை அளித்து வளைகாப்பு நிகழ்ச்சியும் நடத்திய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 926

0

0