சோதனை நடத்தவிடாமல் இடையூறு… வருமான வரித்துறையினர் அளித்த பரபரப்பு புகார்… திமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு!!

Author: Babu Lakshmanan
27 May 2023, 10:44 am
Quick Share

கரூர் ; கரூரில் வருமான வரித்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக திமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் வீடுகளில் நேற்று காலை 7:00 மணி முதல் வருமான வரித்துறையினார் சோதனை நடத்துவதற்காக கரூரின் பல்வேறு பகுதிகளுக்கு குழுக்களாக பிரிந்து சென்றனர். கரூர் நகர பகுதி கோவை சாலை ராயனூர், மண்மங்கலம், காந்திகிராமம் போன்ற பல பகுதிகளில் சோதனை இடுவதற்காக வருமான வரித்துறையினர் சென்றனர்.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் இல்லம் உள்ள ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் சோதனைக்காக வருமான வரித்துறையினர் வந்தனர். இந்த தகவல் கேள்விப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் சம்பவ இடத்திற்கு வந்து,சோதனை நடத்த வந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வருமானவரித்துறை அலுவலர்கள் காரின் கண்ணாடி உடைக்கப்பட்டது. மேலும், வருமான வரித்துறை அலுவலர் காயத்ரி, திமுக நிர்வாகிகளால் சிறை பிடிக்கப்பட்டார்.

தொடர்ந்து, பதட்டமான சூழ்நிலை நிலவியதால், தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருமான வரித்துறை சென்றனர். வருமான வரித் துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்து, நான்கு அதிகாரிகள் கரூர் அரசு மருத்துவமனை மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், வருமான வரித்துறையினருக்கு இடையூறு ஏற்படுத்தியதாக திமுகவைச் சேர்ந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கரூரில் நடைபெற்ற வருமான வரி சோதனையின் போது, ஐந்துக்கும் மேற்பட்ட நபர் கூடியது, அதிகாரிகளே பணி செய்ய விடாமல் தடுத்தது,பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் திமுக சேர்ந்த நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நான்கு வெவ்வேறு இடங்களில் தடுத்ததாக அடையாளம் தெரியாத 50க்கும் மேற்பட்ட திமுக நபர்கள் மீது கரூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதேபோல, திமுகவினர் கொடுத்த புகாரின் பேரில் வருமான வரி துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Views: - 301

0

0