இலங்கை தாதா மர்ம மரணம் : சிபிசிஐடி காவல் முடிந்து 3 பேர் வெவ்வேறு சிறைக்கு மாற்றம்.!!
15 August 2020, 4:41 pmகோவை : இலங்கையை சேர்ந்த நிழல் உலக தாதா அங்கொட லொக்கா மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்டு இருந்த மூன்று பேர் சிபிசிஐடி காவல் நிறைவடைந்த நிலையில் இன்று மீண்டும் கோவை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
இலங்கையின் நிழல் உலக தாதா அங்கோட லொக்கா, இலங்கையிலிருந்து தப்பி 2019 ஆண்டு அக்டோபர் மாதம் முதல் கோவையில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. அவருடன் அவரது காதலி அம்மாணி தாஞ்சியும் தங்கியுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் மூன்றாம் தேதி கோவையில் அவர் தங்கியிருந்த வீட்டில் மர்மமான முறையில் இறந்துள்ளார். இந்நிலையில் மதுரையை சேர்ந்த வக்கீல் சிவகாமசுந்தரி மற்றும் அவரது நண்பர் திருப்பூரை சேர்ந்த தியானேஷ்வரன் என்பவருடைய உதவியுடன் போலியான ஆவணம் தயாரித்து பிரதீப் சிங் என்ற பெயரில் மதுரைக்கு உடலை கொண்டு சென்று எரித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த மரணம் சம்பந்தமாக இலங்கையை சேர்ந்த அம்மாணி தாஞ்சி, தான் தமிழகத்தை சேர்ந்த சிவகாமசுந்தரி மற்றும் தியானேஸ்வரன் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். பிறகு இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
சிபிசிஐடி ஐஜி சங்கர் நேரடி பார்வையில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி ராஜு நியமிக்கப்பட்டார். ஏழு தனி குழுக்கள் அமைக்கப்பட்டு வெவ்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் மூன்று பேரையும் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க மனு செய்யப்பட்டது.
இதையடுத்து கோவை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி கைது செய்யப்பட்டவர்களை, 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி ஸ்ரீகுமார் அனுமதி அளித்தார்.. இன்றுடன் போலீஸ் காவல் நிறைவடைந்த நிலையில் அவர்கள் மூவரும் கோவை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
இதையடுத்து மூவரையும் சிறைக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். இவர்களது நீதிமன்ற காவல் ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி முடிவடையும் நிலையில் சிவகாமசுந்தரி கோவை மத்திய சிறைக்கும் தியானேஸ்வரன் பொள்ளாச்சி சிறைக்கும் அம்மாணி தாஞ்சி இலங்கையை சேர்ந்தவர் என்பதால் புழல் சிறைக்கும் கொண்டு செல்லப்படுகிறார்கள்.