அரசு விடுமுறை நாளிலும் தடையின்றி மதுவிற்பனை… போதையில் நிகழ்ந்த தகராறில் இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்…!!

Author: Babu Lakshmanan
10 October 2022, 2:39 pm
Quick Share

கரூர் : கரூரில் மதுபான கடை விடுமுறை நாளன்று மது போதையில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதில், இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் மிலாடி நபியை முன்னிட்டு அரசு மதுபான கடைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அரசு மதுபான கடைகளுடன் அமைந்துள்ள சில மதுபானக்கூடங்களில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்றுள்ளது. அங்கு மது மதுபானங்களை வாங்கி அருந்திய சிலர் போதையில் தள்ளாடி சென்றுள்ளனர்.

எல்.ஐ.சி அலுவலக வாசல் முன்பு சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத இரண்டு இளைஞர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகளப்பாக மாறி உள்ளது. இதில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளைஞரை, மற்றொரு இளைஞர் சரமாரியாக தாக்கியதில் அவர் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் ரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்த அடையாளம் தெரியாத இளைஞரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அந்த இளைஞரை தாக்கி விட்டு தப்பி சென்ற நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 591

0

0