மொய்.. சீர்வரிசை எல்லாம் பழைய ஸ்டெயிலு… மணமகனை வித்தியாசமாக வரவேற்ற பெண்ணின் தாய்மாமன் ; திருமண விழாவில் நெகிழ்ச்சி சம்பவம்!!!

Author: Babu Lakshmanan
29 June 2023, 9:44 pm
Quick Share

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இருக்கக்கூடிய விக்கிரமங்கலம் பகுதியில் இன்று தனியார் திருமண மண்டபத்தில் மணமகன் யுவா மற்றும் மணமகள் சிவமீனா ஆகியோரது திருமணம் பெரியோர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. பொதுவாக, தென் தமிழகத்தில் திருமண வைபவங்கள், காதுகுத்து போன்ற விசேஷங்கள் என்றால் தாய்மாமனின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

செய்யும் சீர்வரிசையிலிருந்து உறவினர்களோடு வந்திருந்து அங்கு அவர்கள் செய்யும் அலப்பறை தனி தான். அந்த வகையில், சற்று வித்தியாசமாக தனது மருமகனுக்கு செய்ய வேண்டும் என்று யோசித்த மதுரை செக்கானூரணி பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர், தனது நண்பரும், பிரபல பின்னணி பாடகருமான மதுரை போத்தி ராஜாவுடன் இணைந்து, ‘மணமகன் வாராரு’ …என்கின்ற இசை ஆல்பத்தை தயாரித்து இல்லற வாழ்வில் அடி எடுத்து வைக்கும் தனது மருமகனுக்கு பரிசாக வழங்கினார்.

பொதுவாக திருமணம் என்றால் ஆயிரத்திலிருந்து லட்சக்கணக்கில் மொய் எழுதுவது, தங்க மோதிரம், செயின்… இவ்வாறு பரிசாக வழங்குவது, மதுரை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் மிகவும் வழக்கமான ஒன்றாக இருக்கக்கூடிய வேளையில், மொய் எழுதுவதையே கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பதாக மொய்டெக் எனும் கணினி மயமாக்கி மதுரை மற்றும் பிற பகுதிகளில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளில் உறவினர்கள் எழுதும் மொய் பணத்தை கணினி மூலம் வரவு செய்து அதற்கு ரசீதும் வழங்கி வருகின்றனர்.

இந்த சூழலில், தாய்மாமன் வாரானடி என்கின்ற பாடலை, ஏற்கனவே வெளியீடு செய்து மதுரை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பிரபலமாகிய நிலையில், தற்போது தனது மருமகனின் திருமணத்தை முன்னிட்டு மீண்டும் ஒரு இசை ஆல்பத்தை தயாரித்து மருமகனுக்கு பரிசாக வழங்கியுள்ளார்.

திருமண மண்டபத்தில் அந்த பாடலை பாடிய மதுரை போத்திரராஜா மற்றும் பிரபு ஆகியோர் மணமகன் மற்றும் மணமகள் ஆகியோரது கையால் வெளியிடக் கூடிய வகையில் அவர்களது புகைப்படங்களுடன் கூடிய ஒரு பிரேமை மணமேடையில் வழங்கினர். உற்றார், உறவினர்கள் புடை சூழ ஆனந்தமாக அந்த பாடலை திருமண மண்டபத்தில் இருந்த ஒலிபெருக்கியில் ஒலிக்கச் செய்தனர்.

மணமகன், மணமகள் ஆனந்தமாக தங்களது நண்பர்களுடன் ஆட்டம் ஆடியது காண்போரை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. சமீப காலமாக மணமேடைக்கு வரக்கூடிய மணமகள் தோழிகளுடன் ஆடியபடி வரக்கூடிய நிகழ்வு ட்ரெண்டாகி வரக்கூடிய வேளையில், மணமகனுக்கு பரிசாக வழங்கப்பட்ட பாடலுக்கு மணமகளும் இணைந்து ஆடியது திருமண வீட்டிற்கு வந்த அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

பொதுவாக மதுரைக்காரர்கள் என்றால் சற்று வித்தியாசம் தான்…. சாப்பிடுவதிலும் சரி … போஸ்டர் அடிப்பதிலும் சரி … மொய் எழுதுவதிலும் சரி .. இந்த வகையில் அடுத்த கட்டமாக தற்போது பாடல் வெளியீடு செய்திருப்பது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Views: - 2246

0

0