ஷேர் ஆட்டோவில் தொங்கியபடி சிறுவர்கள் ஆபத்தான பயணம்… வைரலாகும் வீடியோவால் அதிர்ச்சி…!!

Author: Babu Lakshmanan
5 March 2024, 10:10 am
Quick Share

மதுரையின் பிரதான சாலைகளில் ஆபத்தான முறையில் ஷேர் ஆட்டோவில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்யும் சிறுவர்களின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெருகிவரும் நாகரிக மாற்றத்திற்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. நம்முடைய அன்றாட வாழ்வில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் செய்ய மோட்டார் வாகனம் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், மதுரை காமராஜர் சாலை பகுதியில் உள்ள தெப்பக்குளத்தில் இருந்து நெல்பேட்டை நோக்கி ஷேர் ஆட்டோ ஒன்று சென்றுள்ளது. அதன் பின்பக்கத்தில் சிறிய அளவு உள்ள படிக்கட்டில், இரு இளைஞர்கள் தொங்கிச் செல்லும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

குறிப்பாக, எப்போதும் பரபரப்பாக காணப்படும் அந்த சாலையில் செல்லக்கூடிய இந்த ஷேர் ஆட்டோவில் சிறுவர்கள் தொங்கி சென்றபடி பயணிப்பது ஆட்டோ ஓட்டுநருக்கு தெரியாதா..? இல்லை தற்போது இருக்கக்கூடிய ரீல்ஸ் மோகத்தில் அவ்வாறு தொங்கியபடி வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டதா..? என்கின்ற ஒரு சந்தேகம் எழுந்து வருகிறது.

இது ஒருபுறம் இருக்க தலைக்கவசம் நமது உயிர் கவசம், தலைக்கவசம் இல்லாமல் பயணம் செய்யாதீர்கள் என ஆங்காங்கே காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தும், ஒளிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், மதுரை ஆண்டாள்புரம் பகுதியில் இருந்து பழங்காநத்தம் நோக்கி செல்லக்கூடிய சாலை ஒன்றில் தலைக்கவசம் இல்லாமல் செல்போன் பேசியபடி, இளைஞர் ஒருவர் பயணம் செய்யும் காட்சி ஒன்று பகிரப்பட்டு வருகிறது.

குறிப்பாக, தனது இருசக்கர வாகனத்தின் முன்பக்கத்தில் பால் கேன் ஒன்றைப் பிடித்தவரும் மறுபுறம் செல்போனை பிடித்தவாறு பேசிக்கொண்டே அந்த இளைஞர் இருசக்கர வாகனத்தில் பாலத்தின் மீது இறங்கியும் சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தை கடந்து செல்லும் காட்சியும் பரவி வருகிறது.

இப்படி செல்போனுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர் பேசிக் கொண்டே வாகனத்தை இயக்கும்போது, இடையே ஏதாவது வாகனம் வந்தால் நிச்சயம் ஆபத்து இருவருக்குமே. எத்தனை அபராதங்களும் எத்தனை வகையான விழிப்புணர்வுகளும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அரசு மூலம் காவல்துறை மூலம் ஏற்படுத்தினாலும் இதுபோன்று இருப்பவர்கள் தானாக திருந்தாவிட்டால் என்ன செய்வது.

Views: - 130

0

0