ஐபிஎல் அணிகளைப் போல பிரிந்து நிற்கும் அதிமுக… 28 பைசா பிரதமர் வீட்டுக்குப் போவது உறுதி ; அமைச்சர் உதயநிதி!!

Author: Babu Lakshmanan
29 March 2024, 4:04 pm
Quick Share

காங்கிரஸ் வேட்பாளரை ஆறு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தால் திருவள்ளூரில் மாதம் இரண்டு நாள் தங்கி நானே பணி செய்வேன் என்று பொன்னேரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் திருவள்ளூர் பாராளுமன்ற தனி தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ் அவர்களை ஆதரித்து கை சின்னத்திற்கு அமைச்சர் உதயநிதி வாக்கு சேகரித்தார். அவருக்கு கட்சியினர் மேல தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரச்சார வேனில் நின்றபடி பேசிய அவர் :- காங்கிரஸ் வேட்பாளரை 6 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். அப்படி வெற்றி பெறச் செய்தால் திருவள்ளூரில் மாதம் இரண்டு நாட்கள் தங்கி இருந்து அவருக்காக பணி செய்வேன். காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் நல்ல வேட்பாளர், திறமையானவர். அவருக்கு தேர்தல் புதிது அல்ல. இவரை வேட்பாளராக அறிவித்த சோனியா காந்திக்கும், காங்கிரஸ்க்கும் நன்றி தெரிவிக்கின்றேன்.

பொன்னேரியில் சாலை மேம்பாட்டு பணிகள், பாதாள சாக்கடை திட்டம், ஆரணி ஆற்றின் கரைகள் மேம்படுத்தும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளை மேற்கொண்டுள்ளேன். மகளிர் இலவச பேருந்து இத்திட்டத்தின் வெற்றி. ஸ்டாலின் பஸ் என பொதுமக்கள் கூறுகின்றனர். பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை, கல்லூரி பயிலும் மாணவியருக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை காலை உணவு திட்டம் போன்ற திராவிட மாடல் திட்டங்களை பல மாநிலங்கள் பின்பற்றும் திட்டங்களாக உள்ளது, எனக் கூறினார்.

மீண்டும் எய்ம்ஸ் செங்கலை கையில் கொண்டு வந்தும், 28 பைசா என பதாகையை காட்டி பிரச்சாரத்தில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பிரதமரின் பெயர் இனி 28 காசு பிரதமர் என்றும் அவர் விமர்சனம் செய்தார். எடப்பாடிக்கும், பிரதமர் மோடிக்கும் கள்ளக்காதல் என்றும், காலில் படுத்துவிடும் பாதம் தாங்கி எடப்பாடி என்றும் கூறிய அவர், மோடியை வீட்டிற்கு அனுப்புவது உறுதி என்றும், திமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும் எனக் கூறினார். மேலும், அதிமுக ஐபிஎல் அணி போன்றது, அதில் பல அணிகள் உள்ளது என்று கூறினார்.

தேர்தல் பிரச்சாரம் காலை 10 மணிக்கு துவங்க வேண்டிய நிலையில் 12:00 மணி வரை வெயிலில் பொதுமக்கள் கட்சியினர் காத்துக் கிடந்து கடும் சிரமம் அடைந்தனர். பிரச்சாரத்திற்கு வந்த உதயநிதி ஸ்டாலின் தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்.

Views: - 124

0

0