சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் வடமாநில தொழிலாளர்கள்: ரயில் நிலையத்தில் பலமணி நேர காத்திருக்கும் பயணம்!!
Author: Rajesh23 ஜனவரி 2022, 11:32 காலை
கோவை: கோவையில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் இங்கு பணியில் உள்ள வட மாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர். இன்று ஊரடங்கு என்பதால் ரயில் நிலையம் வந்த தொழிலாளர்கள் ரயிலுக்காக தவிப்புடன் காத்திருக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதோடு ஒமிக்ரான் அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஞாயிறன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
எந்த நேரத்திலும் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படலாம் என்ற நிலையில், பல்வேறு தொழில் நிறுவனத்தினரும் அச்சமடைந்துள்ளனர். முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டால் இங்கு பணியில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் கிடைக்காமல் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
இந்த சூழலில் கோவையில் பணியில் உள்ள வட மாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர். இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள சூழலில் கோவை ரயில் நிலையம் வந்துள்ள வடமாநில தொழிலாளர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
சொந்த ஊர்களுக்கு செல்ல ரயிலுக்காக காத்திருக்கும் இந்த தொழிலாளர்கள், ரயில் வரும் வரை சாலையோரங்களில் அமர்ந்து உணவுக்காக காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
0
0