வடபழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம்…வானில் வட்டமிட்டு ஆசி வழங்கிய கருடன்கள்: நேரலையில் முருகனை தரிசித்த பக்தர்கள்..!!

Author: Rajesh
23 January 2022, 1:20 pm
Quick Share

சென்னை: வானத்தில் கருடன்கள் வட்டமிட்டு ஆசி வழங்க… கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா முழங்க சென்னை வடபழனி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

பழனியில் உள்ள தண்டாயுதபாணியைப் போல சிறப்பு வாய்ந்த ஆலயம் சென்னை வழனியில் உள்ள முருகன் கோவில். இது செவ்வாய் ஸ்தலமாகவும் போற்றப்படுகிறது. சென்னையில் உள்ளவர்கள் மட்டுமின்றி, பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வருவது வழக்கம்.

முருகனின் தெய்வீக சக்தி

இந்த கோயிலில் கடந்த 2007ஆம்ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு தற்போது கோயில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதற்கான யாகசாலை பூஜைகள் வியாழக்கிழமையன்று தொடங்கின.

கோயிலுக்குள் 108 குண்டங்களுடன் பிரம்மாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. யாகசாலையில் வைத்து பூஜிப்பதற்காக கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகளில் இருந்தும், ராமேஸ்வரம் தீர்த்தக்கிணறு, அறுபடை முருகன் கோயில்கள் என 15 இடங்களில் இருந்தும் புண்ணிய தீர்த்தம் கொண்டு வரப்பட்டது.


வெள்ளிக்கிழமையன்று காலை 9 மணிக்கு இரண்டாம் கால பூஜை தொடங்கி பகல் 12 மணிக்கு மகா பூர்ணாஹூதியுடன் நிறைவு பெற்றது. பின்னர் மாலை 5.30 மணிக்கு மூன்றாம் கால பூஜைகள் நடந்தன. நேற்றும் யாகசாலை பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றன. ஆறு கால பூஜைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து இன்று காலை குடமுழுக்கு நடைபெற்றது.

வானத்தில் கருடன்கள் வட்டமிட்டு ஆசி வழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. கொரோனா வைரஸ் பரவல் மற்றும் முழு ஊரடங்கு காரணமாக கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோயில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் அனைத்தும் தொலைக்காட்சி, யூ-டியூப் சேனல் போன்றவை மூலம் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது . வீட்டில் இருந்தவாரே பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா… முருகனுக்கு அரோகரா என முழக்கமிட்டு குடமுழுக்கு விழாவை தரிசனம் செய்தனர்.

Views: - 574

0

0