சேலம் பாஜகவில் வெடித்தது உட்கட்சி மோதல்… மாவட்ட தலைவருக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு!!!

Author: Babu Lakshmanan
2 May 2024, 10:54 am
Quick Share

சேலம் கிழக்கு பா.ஜ.க மாவட்ட தலைவரை பதவி நீக்கம் செய்யக்கோரி, ஆத்துார் பகுதியில் போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகநாதன். இவர், பாஜக சேலம் கிழக்கு மாவட்ட தலைவராக உள்ளார். ஆத்துார் புது பஸ் ஸ்டாண்ட், அண்ணா தெரு, உடையார்பாளையம் உள்பட ஏழு இடங்களில், பா.ஜ.க, மாவட்ட தலைவருக்கு எதிராக, போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ‘விரைவில் உண்மை வெல்லும்’… ஆபாச பட விவகாரம்… முதல்முறையாக மவுனம் கலைத்த பிரஜ்வல் ரேவண்ணா..!!!

அதில், ஒரு போஸ்டரில், ‘பா.ஜ.க, கூட்டணி கட்சிக்கு உழைக்காமல் எதிர்கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்த, நமது கட்சி நிர்வாகிகளை மாற்றுக் கட்சிக்கு ஓட வைத்த சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதனை பதவியை விட்டு நீக்க வேண்டும்’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றொரு போஸ்டரில், ‘பா.ஜ.க,வின் பணத்தை கொள்ளையடித்த மாவட்ட தலைவர் சண்முகநாதனை பதவியை விட்டு நீக்கு’என குறிப்பிடப்பட்டுள்ளது. பா.ஜ.க, மாவட்ட தலைவருக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன் கூறுகையில், ‘கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட சிலரை, கட்சி பதவியில் இருந்து நீக்கியுள்ளோம். ஆத்துார் உள்ளிட்ட இடங்களில், அவதுாறாக குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, ஆத்துார் டவுன் போலீசில் புகார் அளித்துள்ளோம்.

தவிர, போஸ்டர் ஒட்டிய இடங்களில் உள்ள ‘சிசிடிவி’ கேமராவை ஆய்வு செய்து, பா.ஜ.,வினர் போஸ்டர் ஒட்டியிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கட்சி தலைமைக்கும், இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ., வளர்ச்சி பிடிக்காமல் எதிர் கட்சியினர் இதுபோன்று போஸ்டர் ஒட்டினரா எனவும் சந்தேகம் உள்ளது. என்னை குறிப்பிட்டு போஸ்டரில் குறிப்பிட்டுள்ளது அனைத்து தகவலும் பொய்யானது’ இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 177

0

0