கோவையில் களைகட்டும் ஓணம் பண்டிகை… புத்தாடைகள் அணிந்து மலையாள மக்கள் உற்சாக கொண்டாட்டம்!!

Author: Babu Lakshmanan
29 August 2023, 11:07 am
Quick Share

ஓணம் பண்டிகையையொட்டி அதிகாலையிலேயே நீராடி புத்தாடை உடுத்தி திருக்கோவிலில் கேரள மக்கள் தங்களது பண்டிகையை கொண்டாட தொடங்கியுள்ளனர்.

தங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக, கேரள மக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். தமிழக மக்களுக்கு தீபாவளி பொங்கல் பண்டிகை போல, கேரள மக்களுக்கு ஓணம் பண்டிகை மிகப் பெரிய பண்டிகையாக பார்க்கப்படுகிறது.

கேரள மக்களால் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை, ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதம் அஸ்த நட்சத்திரம் முதல் திருவோணம் வரை 10 நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது. கோவை மாவட்டத்தை பொருத்தவரையில் கேரள மாநிலத்தை ஒட்டி இருக்கும் சூழலில், இங்கு ஏராளமான மலையாளம் பேசும் மக்கள் பணிக்காகவும் பள்ளி, கல்லூரிகளுக்காகவும், பலர் கோவைக்கு இடம் பெயர்ந்தும் உள்ளனர்.

கடந்த வாரம் முதலே ஓணம் பண்டிகை சீசன் தொடங்கியதில் இருந்தே பள்ளிகள், கல்லூரிகள் பணிபுரியும் இடங்கள் என பாரம்பரிய முறைப்படி ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வந்தனர்.

முக்கிய நாளான திருவோண தினமான இன்று மக்கள் அதிகாலையிலேயே நீராடி புத்தாடை உடுத்தி திருக்கோவிலில் தங்களது பண்டிகையை கொண்டாட தொடங்கியுள்ளனர்.

கோவையை பொறுத்தவரையில் மலையாளம் பேசும் மக்கள் அதிகம் வழிபாடு நடத்தும் சித்தாப்புதூர் ஐயப்பன் கோயிலில் ஆயிரக்கணக்கான குடும்பங்களுடன் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவிலில் சிறப்பு அத்தப்பூக்கோலம், செண்டை மேளம், சிறப்பு அலங்காரங்கள் என விழா கோலம் பூண்டுள்ளது. ஓணம் பண்டிகைக்காக கோவையில் பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்களுக்கு இன்று உள்ளுர் விடுமுறையும் விடப்பட்டுள்ளது.

Views: - 305

0

0