வெங்காய வியாபாரியிடம் ரூ.30 லட்சம் மோசடி… தலைமறைவான தம்பதியை கரூரில் கைது செய்த போலீசார்..!!!

Author: Babu Lakshmanan
17 March 2023, 7:06 pm
Quick Share

சென்னை வெங்காய வியாபாரிடம் 30 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதியை, சேலம் காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் விக்னேஷ்(30), இவர் வெளிமாநிலங்களில் இருந்து பூண்டு, வெங்காயத்தை மொத்தமாக கொள்முதல் செய்து தமிழகம் முழுவதும் வியாபாரிகளுக்கு விநியோகம் செய்து வருகிறார். கரூர் ஐந்தாவது குறுக்கு வீதியை சேர்ந்த நந்தகுமார், அவரது மனைவி ஸ்ரீதேவி சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பாராக்கல்லூரியில் காய்கறி கடை வைத்துள்ளார்.

அந்தக் கடைக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் முதல், 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை விக்னேஷ் 30 லட்சம் ரூபாய்க்கு வெங்காயம், பூண்டு வினியோகம் செய்துள்ளார். அந்த பணத்திற்கு தம்பதியர் மூன்று காசோலைகளை வழங்கினர். அதில் பணம் இல்லை என வங்கியில் இருந்து திரும்பியது. இதுகுறித்து விக்னேஷ் பலமுறை கேட்ட நிலையில் தம்பதிகள் பணத்தை தர மறுத்துள்ளனர்.

இதுகுறித்து விக்னேஷ் சேலம் மாவட்ட மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குபதிவு செய்த நிலையில் தம்பதியர்கள் இருவரும் தலைமறைவாகினர்.

இந்த நிலையில் கரூரில் இருந்த நந்தகுமார், ஸ்ரீதேவியை சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். இதைத் தொடர்ந்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Views: - 354

0

0