சட்டசபையில் அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு… ஏகனாபுரம் கிராம மக்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம்…!!

Author: Babu Lakshmanan
31 March 2023, 12:49 pm

சர்வதேச விமான நிலையம் அமைய உள்ள பரந்தூர் மையப் பகுதியான ஏகனாபுரம் பகுதியில் சர்வதேச விமான நிலையம் வருவதை எதிர்த்தும் , நேற்று சட்டப்பேரவையில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் பேசியதை கண்டித்தும், பள்ளிகளை புறக்கணித்து போராட்டம் செய்ததால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் சர்வதேச விமான நிலையம் மீனம் பாக்கத்தில் செயல்பட்டு வருகின்றது. அதை விரிவாக்கும் செய்வதற்கு உண்டான இடவசதிகள் இல்லாத காரணத்தினால், 2வது சர்வதேச புதிய விமான நிலையம் தொடங்குவதற்கு செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நான்கு இடங்களை பரிந்துரை செய்தனர்.

அதில், காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அடுத்த ஏகனாம்புரம் கிராமத்தை மையப்பகுதியாக வைத்து சர்வதேச புதிய விமான நிலைய அமைக்க, 13 கிராமங்களில் சுமார் 5000 விளை நிலங்கள் எடுக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக சுங்குவார்சத்திரம் பகுதி அடுத்த அக்கமாபுரம், மேலேரி, வளத்தூர், தண்டலம், நாகப்பட்டு, நெல்வாய், மகாதேவிமங்கலம் உள்ளிட்ட 13 கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளையும் நீர்நிலை பகுதிகளையும் எடுக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிய வருகிறது.

அதனால், அந்த கிராம பகுதிகளில் உள்ள மக்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற காரணத்தை முன் வைத்தும், இந்த கிராமத்தில் உள்ள வசதி போல், மாற்று இடம் அளித்தாலும் எங்களுக்கு அமையாது எனக்கூறி, இந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளையும், நிலப் பகுதிகளையும் எடுப்பதை தவிர்த்து விட்டு, தமிழக அரசு வேறு பகுதிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, விமான நிலையம் வருவதை ஏற்றுக்கொள்ள மறுத்து ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து, 248வது நாளாக இரவுநேர அறவழி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதேபோல் , புதிய சர்வதேச விமான நிலையம் வருவதை எதிர்த்து, ஊராட்சி மன்ற தலைவர் சுமதி சரவணன், பரந்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பலராமன், தண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் உள்ளிட்ட 3 ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம மக்கள் என அனைவரும் சேர்ந்து விமான நிலைய திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என கூறி ஏகனாபுரம் பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஐந்தாவது முறையாக ஒரு மனதாக முடிவு எடுத்து தீர்மான புத்தகத்தில் கையொப்பம் இட்டனர். ஏற்கனவே சுதந்திர தினம், மே தினம், உள்ளாட்சி தினம், காந்தி ஜெயந்தி, உலக தண்ணீர் தினம் ஆகிய ஐந்து முறை நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் விமான நிலையம் வருவதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், நேற்று சட்டப்பேரவை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை ஏகனாபுரம் பகுதியில் கிராம ஊராட்சி மன்ற கட்டிடம் கட்ட வேண்டும் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ் ராமச்சந்திரன் கட்டிடம் கட்ட இயலாது, அந்த பகுதியில் விமான நிலையத்துக்கான இடங்கள் எடுக்க உள்ளது என பேசியுள்ளார்.

இதை கேள்விப்பட்ட ஏகனாபுரம் கிராம மக்கள் எந்த விதமான முன்னறிவிப்பு அரசாணையோ வெளியிடாத போது, அமைச்சர் கேகே எஸ்எஸ் ராமசந்திரன் பேசியது கண்டிக்கத்தக்கது என கூறி, தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பாமல் பள்ளிக்கூடத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் நடுநிலைப் பள்ளியில் இருந்து ஊர்வலமாக கிளம்பி வந்து பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு கேகேஎஸ்எஸ்ஆரை கண்டித்து கோஷங்கள் எழுப்பியதால் அங்கு மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!