பாஜகவுக்கு எங்கள் முழு ஆதரவு… தமிழகத்தில் 12 தொகுதிகளில் வெற்றி பெறும் : கொ.மு.கவின் பெஸ்ட் ராமசாமி அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
3 March 2024, 1:55 pm
Best
Quick Share

பாஜகவுக்கு எங்கள் முழு ஆதரவு… தமிழகத்தில் 12 தொகுதிகளில் வெற்றி பெறும் : கொ.மு.கவின் பெஸ்ட் ராமசாமி அறிவிப்பு!

கோவையில் கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் சார்பில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து மாநில,மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
அக்கட்சி தலைவர் பெஸ்ட் ராமசாமி தலைமையில் நடந்தது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட,மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் கூட்டணி குறித்து முடிவு செய்ய தலைவர் பெஸ்ட் ராமசாமிக்கு நிர்வாகிகள் முழு அதிகாரம் வழங்கினர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பெஸ்ட் ராமசாமி, இன்னும் எந்த கட்சியிலும் கூட்டணி இறுதி செய்யப்பட வில்லை எனவும், நேர்மையான, வலுவான கட்சி நாட்டை வளப்படுத்தும் கட்சியுடன் இணைந்து இந்திய நாட்டை வளமாக்க செய்ய வேண்டும் என்றார்.

குறிப்பாக 10 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததை நாடு இப்போது செழிப்பாக இருக்கின்றது எனவும், புயல் வந்த போது கூட அமெரிக்கா போன்ற நாடுகள் உதவி செய்ய மறுத்து, நாங்கள் எங்கள் நாட்டை காப்பாற்றி கொள்வோம் என பிரதமர் மோடி சொன்னார் என தெரிவித்தார்.2004 ல் இருந்து 2014 வரை இருந்த பிரதமரை யாருமே மதிக்கவில்லை.

அப்போது அமைச்சரவையில் இருந்த 7 பேர் சிறையில் இருக்கின்றனர். அந்த ஆட்சி காலத்தில் நம்ம மாநிலத்தில் தான் மிகப்பெரிய 2ஜி ஊழல் நடந்தது என கூறியதுடன் 2000 கோடி ஓரே செக்கில் வாங்கி கொண்டு வந்தார்கள் என்றும்
ஆனால் இப்போது இருக்கும் பிரதமருடன் இருப்பவர்கள் ஊழல் செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் ஒரு வேலைக்காக எச்.ராஜாவை அழைத்து சென்ற போது , கட்சிகாரர்களை அழைத்து வந்ததால் செய்து கொடுக்க முடியாது என்று சொல்லி அனுப்பி விட்டதாகவும் ஆனால் இங்கே இருக்கின்ற ஒரு மாநில அமைச்சருக்கு பெருந்தொகையை
லஞ்சமாக கொடுக்க அனுப்பிய போது நேரடியாக வாங்கவில்லை. ஆனால் 3 வீடு கழித்து ஒரு வீட்டில் கொடுக்க சொன்னார்கள் என்றும் கூறினார்.

ஆனால் பணம் கொடுத்தும் கேட்டது கிடைக்க வில்லை இழப்பீடு வாங்கி கொடுத்தார்கள் என ஆதங்கம் தெரிவித்தார்.

இப்போது யாரும் ஊருக்கான பணிகளை செய்து கொடுப்பதில்லை என கூறிய அவர், இப்போது இருக்கும் பிரதமர் மீண்டும் வந்தால் மக்களுக்கானவற்றை செய்து கொடுப்பேன் என சொல்லி இருக்கின்றார் எனவும் ,
இந்தியாவை உலக நாடுகள் திரும்பி பார்க்கின்றனர் எனவும் சுட்டிக்காட்டினார்.வாரிசுக்கு எல்லாம் கிடைக்க வேண்டும் என இங்கே இருக்கின்றனர்.

ஆனால் நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என அங்கே இருப்பவர்கள் நினைக்கின்றனர் எனக்கூறிய பெஸ்ட் ராமசாமி,வரும் தேர்தலில் பிரதமர்மோடியை தேர்வு செய்ய வேண்டும் கொங்குநாட்டு மக்கள் அவரை தேர்வு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கட்சி வலுவாக இல்லை என்பதால் இந்த நாடாளுமன்ற தேர்தலில் கொ.மு.க போட்டியிடவில்லை எனவும்,அதே வேளையில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என தெரிவித்த அவர், கூட்டணி தொடர்பாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை இரண்டு, மூன்று முறை பேசினார் எனவும் தெரிவித்தார்.

பாஜக கூட்டணி தமிழகத்தில் வலுவாக இருப்பதாகவும் தமிழகத்தில் 12 இடங்களில் பா.ஜ.க கூட்டணி பெறும் எனவும் கூறினார்.தொடர்ந்து மாநில அமைச்சருக்கு பெரும் தொகை லஞ்சமாக கொடுத்ததாக சொன்னீர்களே, அந்த அமைச்சர் யார் என்ற கேள்விக்கு , அந்த அமைச்சர் தற்போது சிறையில் இருக்கின்றார் என்றார்.

ஒரு கட்சி தலைவர் லஞ்சம் கொடுப்பது சரியா? தவறா ? என்ற கேள்விக்கு தொழில் துறையில் பணம் கொடுப்பதெல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று சிரித்தபடி கொ.மு.க தலைவர் பெஸ்ட் ராமசாமி தெரிவித்தார்.

Views: - 118

0

0