பழனியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது தைப்பூசத் திருவிழா… வரும் 25ம் தேதி தைப்பூசத் தேரோட்டம்…!!

Author: Babu Lakshmanan
19 January 2024, 8:56 am

பழனியில் தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடைபெறும் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூசத்தேரோட்டம் வருகிற ஜனவரி 25ம் தேதி நடைபெறவுள்ளது.

அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. பழனி ஊர்க்கோவில் என அழைக்கப்படும் பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை‌ 8.30 மணியளவில் கோவில் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதுமிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். தைப்பூசத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் 6ம் நாள் திருவிழாவான ஜனவரி 24ம் தேதி மாலை நடைபெறுகிறது. தொடர்ந்து அன்று இரவு நான்கு ரதவீதிகளில் வெள்ளித்தேரோட்டமும், ஜனவரி 25ஆம் தேதி முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டமும் நடைபெறுகிறது.

அருள்மிகு முருகபெருமான் இன்று முதல் தினமும் தங்கமயில், வெள்ளிமயில், ஆட்டுக்கிடா, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.

கொடியேற்ற நிகழ்ச்சியில் பழனி கோவில் அறங்காவலர் குழு தலைவர்கள் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், இணைஆணையர் மாரிமுத்து உதவி ஆணையர் லட்சுமி,உள்ளூர் பிரமுகர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

வருகிற 28ம்தேதி இரவு தெப்பத்தேரும், தொடர்ந்து கொடியிறக்க நிகழ்ச்சியுடன் தைப்பூசத் திருவிழா நிறைவடைய உள்ளது. தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரை வரும் பக்தர்களின் வசதிக்காக பழனி திருக்கோவில் நிர்வாகம் மற்றும் பழனி நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?