இளைஞர் மர்ம சாவு.. எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள் ; வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது..!!

Author: Babu Lakshmanan
6 February 2024, 2:45 pm
Quick Share

சிவகங்கை அருகே இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், இறப்பிற்கு காரணமானவரை கைது செய்ய கோரி எஸ்.பி அலுவலகம் முற்றுகையிட்ட உறவினர்களை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கீழப்பூங்குடி கிராமத்தை சேர்ந்தவர் அழகர் முத்துலெட்சுமியின் மூத்த மகன் அருன்ராஜ். இவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் இடையே ஏற்கனவே கோவிலில் வழிபாடு தொடர்பாக பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த திங்கள் அன்று மாலை மணிகண்டன் அவரது உறவினர்களுடன் கிராமத்தில் உள்ள கோவில் வாசலில் பேசிக்கொண்டிருக்கும்போது, அதே நேரம் வேலை முடித்து வீடு திரும்பிய அருன்ராஜுக்கும், மணிகண்டனுக்குமிடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மணிகண்டனை அருன்ராஜ் தாக்கியதாக கூறி மதகுபட்டி காவல் நிலையத்தில் மணிகண்டன் புகாரளிக்கவே, அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அருன்ராஜை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனை தொடர்ந்து, நேற்று 4 ஆம் தேதி பிணையில் அருன்ராஜ் வீடு திரும்பிய நிலையில், மணிகண்டன் அருன்ராஜை அழைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அருண்ராஜ் அவரது வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த மதகுபட்டி காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த நிலையில், அங்கு அவரது உறவினர்கள் இறப்பிற்கு காரணமான மணிகண்டனை கைது செய்யக்கோரி சிவகங்கை மானாமதுரை சாலையில் உள்ள அம்பெத்கர் சிலை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானம் செய்து காவல்துறை அனுப்பிவைத்தனர்.

இதனை தொடர்ந்து, இரண்டாவது நாளாக காவல்துறை நடவடிக்கை எடுக்காத நிலையில், சிவகங்கை எஸ்.பி அலுவலகத்தை உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டதுடன், வாயிலை மறித்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், அவர்களிடம் ஏ.டி.எஸ்.பி காட்வின் ஜெகதீஸ்குமார் சமாதானம் செய்த நிலையில், சமாதானம் ஆகாத உறவினர்கள் அருகேவுள்ள ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். அவர்களை வழிமறித்த காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்து கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதில் இறந்தவரின் உறவினரான பெண் காவலர் (சென்னை) ஒருவர் வந்திருந்த நிலையில், அவரையும் கைது செய்ய ஏ.டி.எஸ்.பி காட்வின் ஜெகதீஸ்குமார் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து பெண் காவலரை தரதரவென இழுத்துச் சென்று கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 108

0

0